×

அக்னிபாதை திட்டத்தின் கீழ் கடற்படையில் சேர 9½ லட்சம் பேர் விண்ணப்பம்... 82 ஆயிரம் பெண்களும் போட்டி!!

டெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் கடற்படையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் அக்னிபாதை திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17 முதல் 23 வயதுக்கு உட்பட்ட அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒன்றிய அரசின் இத்திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், ராணுவத்தில் சேர முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தன. இத்திட்டத்தை கைவிடும்படி எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்திய நிலையில், திட்டத்தை கைவிட முடியாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும், அக்னவீரர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தொடர்ந்து அறிவித்தது. இதனிடையே விமானப்படைக்கான அக்னிவீரர்கள் தேர்வுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி தொடங்கியது. ராணுவம், கடற்படைக்கான அக்னிவீரர்கள் தேர்வுக்கான ஆன்லைன் முன்பதிவும் ஜூலை 1 முதல் தொடங்கியது.

இந்த நிலையில், இந்திய விமானப்படையில், சுமார் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடற்படையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 82 ஆயிரத்து 200 பேர் பெண்கள் ஆவர் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Navy , Fire Path, Navy, Application
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக...