×

300 ஆண்டுகள் பழமையான 9 கற்சிலைகள் மீட்பு: வெளிநாடுகளுக்கு கடத்த பதுக்கல்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து திருடப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான 9 கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை பிராட்வே பகுதியில் மீட்டனர். சென்னை பிராட்வேயில் இருந்து பழங்கால கற்சிலைகள் பல வெளிநாடுகளுக்கு கடத்த அங்குள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் சென்னை பிராட்வே பிடாரியார் கோயில் தெருவில் உள்ள பமீலா இமானுவேல் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் அறை ஒன்றில் பழமையான தட்சிணாமூர்த்தி கற்சிலை ஒன்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர்.

மேலும், முருகன், வள்ளி என 8 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 சிலைகள் குறித்து வீட்டின் உரிமையாளர் பமீலா இமானுவேலிடம் விசாரணை நடத்தினர். என் கணவர் தான் இந்த சிலைகளை எடுத்து வந்தார். ஆனால், இமானுவேல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்றார். மேலும், இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், உயிரிழந்த இமானுவேல் சிலை கடத்தல்காரர் என்றும், இவர் சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள கோயில் சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு கப்பல்கள் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.பிறகு கைப்பற்றப்பட்ட 9 சிலைகளுக்கான எந்த ஆதாரங்களும் பமீலா இமானுவேலிடம் இல்லாததால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்து தொல்லியல் துறை நிபுணர்களிடம் விசாரித்த போது, பறிமுதல் செய்யப்பட்ட 9 சிலைகளில் 7 சிலைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமையானவே என தெரியவந்தது.


Tags : Rescue of 9 300-year-old stone idols: Hoarding to smuggle abroad
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...