கேரளாவில் கனமழை பலி 20 ஆக உயர்வு: சிவப்பு எச்சரிக்கை வாபஸ்

திருவனந்தபுரம் கேரளாவில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. கேரளாவில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. நெய்யார், பேப்பாறை, அருவிக்கரை உள்பட பல அணைகள் திறக்கப்பட்டு   உள்ளன.

கேரள மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடுக்கி மாவட்டம் பொன்முடி, கல்லார்குட்டி, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மூழியார் உள்பட 7 அணைகளுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று பகல் மழையின் தாக்கம் குறைந்ததால், சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இன்று 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாளில் கேரளாவில் கனமழைக்கு 20 பேர் பலியாகி உள்ளனர். 3 பேரை காணவில்லை. நேற்று மட்டும் 7 பேர் இறந்துள்ளனர்.

* இடுக்கி அணைக்கு அலர்ட்

முல்லைப் பெரியாறு அணையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 134.90 அடியாக இருந்தது. இடுக்கி  அணையின் நீர்மட்டமும் 2,375.533 ஆக உயர்ந்ததால், நீல எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் மேலும் 7 அடி உயர்ந்தால், சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணை திறக்கப்படும்.

Related Stories: