×

பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் முறையீடு: ஆலோசனைக்கு பிறகு உத்தரவு பிறப்பிப்பதாக தலைமை நீதிபதி தகவல்

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த  வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது; வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீது சம்மந்தப்பட்ட நீதிபதியிடம் கருத்து கேட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

இதில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்குகளை இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி, அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என்றும் வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கையுடன் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் (ஜூடீசியல்) மனு கொடுத்தார்.

இதையடுத்து, நேற்று மாலை தலைமை நீதிபதி அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, வழக்கிற்கு சம்மந்தமில்லாமல் தனி நீதிபதி கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதைக்கேட்ட தலைமை நீதிபதி, பொதுவாக வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றும் நடைமுறையில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. இருந்தபோதிலும், உங்களின் மனு மற்றும் தனி நீதிபதியின் கருத்தை கேட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். பொதுவாக வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றும் நடைமுறையில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை.

Tags : O. Panneerselvam ,High Court ,General Assembly ,Chief Justice , O. Panneerselvam's appeal in the High Court seeking transfer of the General Assembly case to another judge: Chief Justice informs that he will issue an order after consultation
× RELATED சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலை...