பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் முன்னிலையில் 2வது நாளாக சோதனை

* சென்சார் கதவுகள், கருவிழிதிரை லாக்கர்கள் தொழில்நுட்ப உதவியால் திறப்பு

* பினாமிகள் பெயரில் உள்ள பத்திரங்கள், சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்த ஆவணம் பறிமுதல்

சென்னை: சினிமா பைனான்சியர்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் 2வது நாளாக சோதனை நடந்தது. இதில், அன்புசெழியன், அவரது சகோதரர் அழகர்சாமி வீடுகளில் அனைத்திலும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், டெல்லியில் இருந்து வந்த 3 சிறப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது கிடைத்த பினாமிகள் பெயரில் வாங்கி குவித்த சொத்துக்கள், பல கோடி ரொக்க பணம் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிகத்தில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை, மதுரையில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவரது நண்பர்களான பிரபல திரைப்பட தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, டி.ஜி.தியாகராஜன், சீனிவாசனுக்கு சொந்தமான வீடுகள், சினிமா தயாரிப்பு நிறுவன அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று நள்ளிரவு வரை தொடர் சோதனை நடத்தினர். மதுரையில் உள்ள திரையரங்கம் என அன்புசெழியனுக்கு சொந்தமான 35க்கும் இடங்களில் 2வது நாளாக சோதனை நீடித்தது.

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் தெருவில் உள்ள அன்புசெழியனின் அவரது சகோதரர் அழகர்சாமியின் வீட்டின் கதவுகள் அனைத்து சென்சார் மற்றும் கருவிழிதிரை லாக்கர் பொருத்தப்பட்டிருந்ததால் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடியவில்லை. அதேநேரம், அன்புசெழியன் உட்பட 6 சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள், பினாமி சொத்துக்கள், ரொக்க பணம், சட்ட விரோத பணம் பரிமாற்றம் குறித்த ஆவணங்களை கணக்காய்வு செய்ய டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு 2 பேரும் சென்னைக்கு ஒருவர் என 3 சிறப்பு வருமான வரித்துறை அதிகாரிகள் வரவைழக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

பிறகு சென்னை வந்த சிறப்பு அதிகாரியின் முன்னிலையில் அன்புசெழியனின் சகோதரர் அழகர்சாமியை அதிகாரிகள் சென்னை வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டின் சென்சார் கதவுகளை திறந்து சோதனை நடத்தினர். அழகர்சாமி வீட்டில் உள்ள லாக்கர்கள் அனைத்தும் கருவிழித்திரை சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அழகர்சாமியை வைத்து அனைத்து சென்சார் லாக்கர்களையும் தொழில் நுட்ப அதிகாரிகளை வைத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, கட்டுக்கட்டாக ரொக்க பணம், பினாமி பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்து பத்திரங்கள், கடன் கொடுத்த சினிமா தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்த சொத்து பத்திரங்கள் அனைத்து சிக்கியதாக கூறப்படுகிறது.

அன்புசெழியன் வீடு மற்றும் அவரது சகோதரர் அழகர் சாமி வீட்டில் உள்ள சென்சார் மற்றும் கருவிழித்திரை லக்கர்கள் அமைக்கப்பட்டிருந்ததால் தான் டெல்லியில் இருந்து 3 சிறப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 2 நாட்கள் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட கோடி கணக்கில் வராத ரொக்க பணம், சட்டவிரோத பணபரிமாற்றம், ஒன்றிய அரசுக்கு செய்துள்ள வரிஏய்ப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த கணக்காய்வு முடிந்த பிறகு தான் எத்தனை கோடி ஒன்றிய அரசுக்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டது என்று தெரியவரும் என வருனமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: