அரசு கலை-அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை இறுதி பட்டியல் வெளியீடு: நாளை கலந்தாய்வு தொடங்குகிறது

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு இறுதி தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரி இணையதளதில் வெளியிடப்பட்டுள்ளது. நாளை கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். அந்த வகையில், பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் இருக்கும் 1.20 லட்சம் இடங்களுக்கு, 4.7 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அந்த வகையில், இறுதியாக 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 பேர் மட்டுமே தகுதி உள்ளவர்களாக தேர்வாகினர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களின் இறுதி தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு தேதியை, செல்போன் மற்றும் இமெயில் முகவரிக்கு அனுப்பி வருகின்றனர். அதன் அடிப்படையில் மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். அரசு கலை கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு நூலக கட்டணம் உள்பட இதர கட்டணங்கள் அந்த கல்லூரிகள் இணைந்திருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு செலுத்தவேண்டும். அந்தவகையில் ஒரு குறிப்பிட்ட கட்டணம் மாணவ-மாணவிகளிடம் வசூலிக்கப்பட உள்ளது. விண்ணப்பித்தவர்களில் சிலர் தனியார் கல்லூரிகளில் அவர்களுக்கு விருப்பப்பட்ட பாடப்பிரிவு கிடைத்து, சேர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களைத்தவிர மீதமுள்ளவர்கள்தான் இந்த கலந்தாய்வில் பங்குபெறுவார்கள். அவ்வாறு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு ஏற்றவாறு கூடுதல் இடங்கள் தேவைப்பட்டால் அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

Related Stories: