ஊதிய ஒப்பந்த 6வது கட்ட பேச்சுவார்த்தை அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்: பே மேட்ரிக்ஸ் முறை ஊதியம் அமல்? போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உறுதி

சென்னை: அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட சலுகைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்களில் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். இதற்கான பேச்சுவார்த்தை அதிமுக ஆட்சியில் 2 முறையும், திமுக ஆட்சியில் 3 முறையும் நடந்தது. இந்நிலையில், 6வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடந்தது. இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்கும் வகையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று 6வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில், 66 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்து செயலாளர் கே.கோபால், நிதித்துறை இணைச்செயலாளர் அருண் சுந்தர் தயாளன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், 8 போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த பேச்சுவார்த்தையின்போது அவர்கள் வைத்திருந்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வேலை நிறுத்தம் அறிவித்திருந்த இயக்கங்களும் கூட்டத்தில் கலந்துகொண்டன. நான்காண்டுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறித்தும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் எவை களையப்பட்டதோ அவை மீண்டும் கொண்டுவரப்படும். பே-மேட்ரிக்ஸ் என்பது அவர்களுடைய சம்பள விகிதத்தில் இருந்த குளறுபடியை நீக்கி கடந்த காலத்தில் இருந்தது போல மீண்டும் கொண்டு வரப்படும். அதனை எந்த தேதியில் கொண்டு வருவது, எந்த தேதியில் சம்பளம் உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தாமல் இன்று இந்த துறை செயல்பட்டு கொண்டிருப்பதற்கு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தருகின்ற நிதியின் காரணத்தினால்தான். தமிழக மக்களுக்கு சுமை வந்து சேரக்கூடாது என்பதற்காக பேருந்து கட்டணங்களை உயர்த்த கூடாது என தமிழக முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். போக்குவரத்து துறையில் இலவச சலுகைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தமிழக முதல்வர் அரசு மூலமாக நிதி வழங்கி வருகிறார். இதனால் போக்குவரத்து துறைக்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. எனவே மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சேவைகள் தொடர்ந்து செயல்படும்.

Related Stories: