உணவு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம்: தொழிலாளர் நலத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை உணவு நிறுவனம் ஒன்றில் குழந்தை தொழிலாளரை பணியமர்த்தியவருக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சிறுவனை மீட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் தொழிலாளர் துறையினர் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் ஆணையர் ஆகியோரின் அறிவுரைகளின் படி 1986ம் வருட குழந்தை தொழிலாளர் மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் (தடைசெய்தல் மற்றும் முறைபடுத்துதல்) சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழந்தை தொழிலாளர் தடுப்பு குழுவினருடன் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு சென்னை, திருவான்மியூர் பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர் பணிபுரிந்ததாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சென்னை, 2ம் கட்ட தொழிலாளர் உதவி ஆணையரின் (அமலாக்கம்)  உத்தரவின்படி சென்னை, 18ம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வர் ஆபரேஷன் ஸ்மைலி (Operation Smaille) குழு மற்றும் தன்னார்வ குழுவினருடன் புகார் தெரிவிக்கப்பட்ட உணவு நிறுவனத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு பணிபுரிந்த சிறுவன் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சட்டப்படி சம்பந்தப்பட்ட வேலையளிப்பவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சிறுவனை பணியமர்த்தியது குற்றம் தீர்ப்பளிக்கப்பட்டு என ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: