×

திருப்பூரில் பனியன் நிறுவன அதிபரிடம் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து ரூ.16 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன அதிபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் போல நடித்து ரூ.16 லட்சம் அபகரிக்கப்பட்டது.  இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாநகரம் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் கிஷோர் (40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பனியன் நிறுவன அதிபர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அவருக்கு பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகி, எஸ்எம்எஸ் அனுப்பி வந்தார். இதன்மூலம் நண்பர்களாகியுள்ளனர். இந்நிலையில், லண்டனை சேர்ந்த நபர் கிஷோருக்கு, டாலர் மற்றும் நகைகளை பரிசாக பார்சலில் அனுப்புவதாக கூறியுள்ளார்.

அதன்பின் கிஷோரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் டெல்லி விமான நிலையத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். அவரிடம் உங்களுக்கு வந்துள்ள பார்சல் சட்டவிரோதமானது, இதில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும், அதை பாதுகாப்பாக பெற பல லட்சம் செலவழிக்க வேண்டும் என கூறி கிஷோரிடம் கடந்த 2 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக ரூ.16 லட்சம் வரை பெற்றுள்ளார். ஆனால், இதுவரை கிஷோருக்கு பார்சல் வந்து சேரவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், இது குறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், உண்மையில் அந்த நபர்கள் லண்டன், டெல்லியில் உள்ளனரா? அல்லது உள்ளூரில் இருந்து கொண்டு போலியாக சமூக வலைதளத்தில் கணக்கை உருவாக்கி மோசடி செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Tags : Banyan Company ,Tirupur , Scam of Rs 16 lakh from Banyan CEO in Tirupur by pretending to be a customs officer: Cybercrime police investigate
× RELATED பெண்ணிடம் நகை பறிப்பு