மும்பை ஐ.டி. கம்பெனியில் வேலை தருவதாக 100 பேரிடம் ரூ.5 கோடி மோசடி குமரி வாலிபர் கைது

பூதப்பாண்டி: ஐ.டி.கம்பெனியில் வேலை தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்ததாக குமரியை சேர்ந்த இளைஞரை திட்டுவிளையில் மும்பை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை குருசடி பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் ஷாரோன் (30).  மும்பை சைபர் கிரைம் போலீஸ் மற்றும் பூதப்பாண்டி போலீசார் கொண்ட தனிப்படையினர், பிரின்ஸ் ஷாரோன் வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவரை பூதப்பாண்டி காவல் நிலையம் அழைத்து சென்று ஒன்றரை மணி நேரம் விசாரணை நடந்தது. பின்னர் அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், பிரின்ஸ் ஷாரோன் மற்றும் அவரது கூட்டாளிகள் 16 பேர் சேர்ந்து மும்பை, மலேசியா, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் ஐ.டி. கம்பெனி நடத்தி வருவதாகவும் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி மனு செய்த பட்டதாரி இளைஞர்களிடம் பணம் வசூல் செய்ததுடன், வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் பணத்தை எடுத்துள்ளனர். அந்த வகையில் மும்பையில் 100 பேரிடம் ரூ.5 கோடி வரை மோசடி செய்துள்ளனர். அவர்கள் அங்குள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் வழக்கு பதிந்து தான், பிரின்ஸ் ஷாரோனை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: