×

காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு கோலாகலம்: டெல்டா மாவட்டங்களில் மக்கள் குவிந்தனர்

திருச்சி: டெல்டா மாவட்டங்களின் காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் புதுமண தம்பதிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், வயது மூத்த பெண்கள் என அனைவரும் அதிகாலையிலேயே காவிரி ஆற்றுக்கு வந்தனர். ஆற்றில் புனித நீராடி, வாழை இலை போட்டு அதில் பச்சரிசி, மா, கொய்யா, வாழைப்பழம் உள்ளிட்ட 9 வகை பழங்கள், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு, காதோலை, கருகமணி, கரும்பு வைத்து காவிரித் தாய்க்கு வழிபாடு நடத்தினர். பின்னர் தாலி பெருக்கும் விதமாக ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு மாற்றி அணிந்து கொண்டனர். அதேபோல, புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடுகள் செய்து புதிய தாலிக் கயிறு மாற்றிக் கொண்டு மணமாலைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

ஆற்றில் அதிகமாக தண்ணீர் செல்வதால் தீயணைப்பு வீரர்கள், மீட்புத்துறை சார்பில் வீரர்கள் ரப்பர் படகு மற்றும் மிதவை ஜாக்கெட்டுகளுடன் தயார் நிலையில் இருந்தனர். இதேபோல் ஓடத்துறை, தில்லைநாயகம் உள்ளிட்ட காவிரிப் படித்துறை பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு புஷ்பமண்டப படித்துறை அதிகாலை 5.30 மணிக்கே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், திருவிடைமருதூர் காவிரி படித்துறைகளில் ஆயிரக்கணக் கானோர் காவிரித் தாயை வழிபட்டு ஆடிபெருக்கை கோலாகலமாக கொண்டாடினர். திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் பக்தர்கள் படையலிட்டு வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் பக்தர்கள் திரண்டனர். தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து விட்டனர்.

Tags : Adiper ,Cauvery , Riots for Adiper on the banks of the Cauvery: People thronged the delta districts
× RELATED காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை