×

சேந்தமங்கலத்தில் இரு சமூகத்தினர் இடையே பயங்கர மோதல் - கல்வீச்சு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் நடந்த வல்வில் ஓரி விழாவின்போது இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட கார்களில் நேற்று புறப்பட்டு சென்றனர். அதே போல், ஈரோட்டில் இருந்து கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க, பத்துக்கும் மேற்பட்ட கார்களில் மற்றொரு சமூகத்தினர் சென்று கொண்டிருந்தனர். சேந்தமங்கலம் வண்டிப்பேட்டை ரவுண்டானாவில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர்.

இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரின் கொடியை கிழித்தெறிந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சமூகத்தினர் 50க்கும் மேற்பட்டோர், எதிர் சமூகத்தினரின் கார்களை கற்கள் மற்றும் தடியால் அடித்து நொறுக்கினர். மேலும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டது. அந்த இடமே போர்க்களம் போல் ஆனது. காரில் இருந்தவர்கள் நாலாபுறமும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அனைவரும் தப்பித்து ஓடினர்.

Tags : Senthamangalam , Terrible clash between two communities in Senthamangalam - stone pelting
× RELATED இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்