×

அமெரிக்கா, சீனா ராணுவங்கள் குவிப்பு தைவான் எல்லையில் போர் பதற்றம்: விமானங்கள், கப்பல்கள், வீரர்கள் தயார்நிலை

தைபே: அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால், அமெரிக்கா - சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவானுக்கு உரிமை கோரி வரும் சீனா, அந்த நாட்டுக்கு அமெரிக்கா உட்பட தனது எதிரி நாடுகளின் தலைவர்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது. அதன் கடும் எதிர்ப்பையும், மிரட்டலையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி நேற்று முன்தினம் தைவானுக்கு சென்றார். அவருடைய பயணத்தை தடுக்கும் வகயைில், தைவான் எல்லைக்குள் 21 போர் விமானங்களை அனுப்பி அச்சுறுத்தியது. கடலில் போர் கப்பல்களையும் நிறுத்தி பயமுறுத்தியது. ஆனால், அமெரிக்க போர் விமானங்களின் புடை சூழ தைவானுக்கு பெலோசி சென்றார். இது, சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை அளித்துள்ளது.

இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெலோசி பயணம், ‘ஒரே சீனா கொள்கை’யையும், சீனா- அமெரிக்கா கூட்டு ஒப்பந்தங்களையும் மீறிய செயல். இதற்கான விலையை அமெரிக்கா கொடுக்கும்’ என்று தெரிவித்தது. போர் விமானங்களின் அணிவகுப்புடன் நேற்று முன்தினம் தைவான் சென்ற பெலோசி, தனது பயணத்தை நேற்று முடித்துக் கொண்டு ஒற்றை விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருக்கு அமெரிக்க போர் விமானங்கள் எதுவும் பாதுகாப்பு அளிக்கவில்லை.

பெலோசியின் பயணத்தை கடுமையான மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டுள்ள சீனா, தைவான் எல்லையை சுற்றிவளைத்து போர் விமானங்கள், போர் கப்பல்கள், ராணுவ கவச வாகனங்களை நிறுத்தி உள்ளது. அதன் ராணுவ வீரர்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலடியாக அமெரிக்காவும் தனது போர் விமானங்கள், போர் கப்பல்களை தயார்நிலையில் நிறுத்தியுள்ளது. இதனால், இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒரே சீனா கொள்கைக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்துள்ளது.

* பின்வாங்க மாட்டோம் தைவான் அதிபர் உறுதி
தைவான் அதிபர் சாய் இங்-வென்னை கூறுகையில், ‘சீன ராணுவ அச்சுறுத்தல்களை கண்டு, தைவான் பின்வாங்காது. நாங்கள் எங்கள் நாட்டின் இறையாண்மையை உறுதியாக நிலை நிறுத்துவோம்,’ என்றார்.

* அமெரிக்க தூதருக்கு சம்மன்
சீனாவில் உள்ள அமெரிக்க தூதர் நிக்லோஸ் பர்ன்சுக்கு சீனா வெளியுறவுத் துறை நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. அதில், ‘அமெரிக்கா தனது தவறுகளுக்கு, ஒரு விலையை கொடுக்கும். தைவானின் உள்விவகாரத்தில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

* புறப்பட்டார் பெலோசி
தைவானில் இருந்து புறப்பட்ட பெலோசி, ‘உலகம் இன்று ஜனநாயகம், எதேச்சதிகாரம் ஆகிய ஒன்றில் தேர்வு செய்ய வேண்டிய நிலையை எதிர்கொள்கிறது. தைவான் மட்டுமின்றி, உலகளவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உறுதி நீடிக்கும். தைவானை அமெரிக்கா ராணுவ ரீதியாகப் பாதுகாக்கும்,’ என தெரிவித்தார்.

* பொருளாதார தடை
பெலோசியை தைவான் வரவேற்றதால், தைவானின் சில உணவு பொருட்களை இறக்குமதி செய்யவும், சீனாவின் இயற்கை மணலை தைவானுக்கு ஏற்றுமதி செய்யவும் சீனா தடை விதித்துள்ளது.

Tags : US ,China ,Taiwan , US, China military build-up Taiwan border war tense: planes, ships, soldiers ready
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...