×

ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு புகார் எடப்பாடி மீதான சிபிஐ விசாரணை ரத்து: விசாரணை அமைப்பை முடிவு செய்ய சென்னை ஐகோர்ட்டுக்கு அதிகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: ரூ.4,800 கோடியிலான நெடுஞ்சாலை முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்ற ஐகோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எந்த விசாரணை அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற முடிவை சென்னை உயர் நீதிமன்றமே எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையை பரிசீலித்து விசாரிக்கலாம் என்று தன் உத்தரவில் கூறி உள்ளது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், அவர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் தான் பழனிசாமி மீது ரூ.4,800 கோடி மதிப்பிலான முறைகேடு நடந்திருப்பதாக முதலாவதாக புகார் அளித்திருந்தார். கிடப்பில் கிடந்த இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க  உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தில் திமுக தரப்பில் கேவியட் மனுவும், அதேபோன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையும், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹேமா கோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை என்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமா என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞர், சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால் இதில் ஒப்பந்த முறைகேடு சுமார் ரூ.4,800கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதால், சுதந்திரம் மற்றும் நேர்மையான தனி விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும். இதுதான் எங்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவில், இந்த விவகாரத்தில் முன்னதாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்கிறோம். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேட்டு வழக்கில், முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் பரிசீலனை செய்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம். அதற்கு எந்த தடையோ அல்லது நிபந்தனைகளோ கிடையாது.

இதில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது வேறு விசாரணை அமைப்போ யார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை உயர் நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவிடும். அதன் அடிப்படையில் வழக்கு விசாரணையை மீண்டும் தொடரலாம் என உத்தரவிட்டனர். இதில் முன்னதாக உலக வங்கி சட்டத்தையே மிஞ்சும் வகையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என உச்ச நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி பதில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒப்பந்த முறைகேடு சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதால், சுதந்திரம் மற்றும் நேர்மையான தனி விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும்.

Tags : CPI ,Edapadi ,Chennai ,iCourt ,Supreme Court , CBI inquiry into Rs 4,800-crore tender fraud complaint quashed: Madras High Court empowered to decide on probe set-up; Supreme Court action order
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான...