×

வங்கியில் இருந்து வருவதாக கூறி வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: தலைமறைவு குற்றவாளி கைது

பெரம்பூர்: வங்கியில் இருந்து வருவதாக கூறி பேச்சு கொடுத்து, வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மதுரையை சேர்ந்த தலைமறைவு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவரது மனைவி அஸ்வினி (29). இவர் கடந்த மே 14ம் தேதி வீட்டில் இருந்தபோது, தனியார் வங்கியில் இருந்து வருவதாக கூறிய ஒரு நபர், சந்துரு என்பவர் இருக்கிறாரா என கேட்டு பேச்சு கொடுத்துள்ளார்.

அதற்கு, அப்படி யாரும் இல்லை என்று அஸ்வினி கூறிவிட்டு கதவை மூடும்போது திடீரென்று மர்ம நபர் கதவை தள்ளிவிட்டு அஸ்வினியின் கழுத்தை பிடித்து தாலி செயினை அறுக்க முயன்றுள்ளார். உள்ளே தூங்கிக் கொண்டிருந்த அஸ்வினியின் தாய் ஓடிவந்து சத்தம் போடவே, அந்த நபர் ஓடிவிட்டார். இதுகுறித்து அஸ்வினி திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புக்கரசி, அந்த பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் ஒருவரின் புகைப்படம் சிக்கியது.

அவர், கொடுங்கையூர் விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணா (26) என்பதும், மதுரையில் தலைமறைவானதை தொடர்ந்து போலீசார் இவரை தேடி வருவதும் தெரிந்தது. இந்நிலையில், நேற்று திருவிக நகர் போலீசார் ராஜேஷ் கண்ணாவை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளன. இதை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

Tags : Absconder , Attempted to break into a woman's house claiming to be from the bank and steal a chain: Absconder arrested
× RELATED கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது