நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நீரின் தேவையை பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் நேற்று எழுப்பிய கேள்விகள், அதற்கு ஒன்றிய அரசு தரப்பில் தரப்பட்ட பதில்கள் வருமாறு:

கழிவுநீர் சுத்திகரிப்பு

மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்வியில், ‘வேலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு அம்ருத் திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்பட்டதா? திருப்பத்தூர் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர், வேலூர், குடியாத்தம், ராணிப்பேட்டை போன்ற இடங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அடல் மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டதா?’ என கேட்டிருந்தார். இதற்கு ஒன்றிய அமைச்சர் கவுசல் கிஷோர், ‘அடல் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.32.456 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஆம்பூர், வேலூர் ஆகிய இரண்டும் அம்ருத் திட்டத்தின் கீழ் உள்ளன’ என தெரிவித்தார்.

கோவை விமான நிலையம்

மாநிலங்களவையில் திமுக எம்பி ராஜேஷ் குமார் எழுப்பிய கேள்வியில், ‘தமிழகத்தில் கோவை விமான நிலையத்தின் மேம்படுத்தல் மற்றும் விரிவாக்க திட்டத்தின் நிலை என்ன?’ என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங், ‘கோவை விமான நிலையத்தில் 5சி வகை விமானங்களை நிறுத்த கூடுதல் கட்டுமானப் பணிகள் மற்றும் இரண்டு ஏ.டி.ஆர்.எஸ்களுக்கு ஏப்ரான் நீட்டிப்பு ரூ.25.28 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடு பாதையை மேம்படுத்தும் பணி ரூ.49.83 கோடி செலவில் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் முடிக்கப்படும். இதில் தேவையான நிலங்கள் மாநில அரசால் இலவசமாக வழங்கப்படுவதால், அதற்காக நிதி எதுவும் ஒதுக்கவில்லை’ என தெரிவித்தார்.

நீரின் தேவை அதிகரிப்பு

மாநிலங்களவையில் திமுக எம்பி ஆர்.கிரிராஜன் எழுப்பிய கேள்வியில், ‘மக்கள் தொகை அதிகரிப்பு, தொழில்துறையில் விரைவான மாற்றங்கள் ஆகியவற்றால் தண்ணீரின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை ஒன்றிய அரசுக்கு தெரிய வந்துள்ளதா? அப்படியென்றால் அதை பூர்த்தி செய்வதற்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?’ என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஸ்ரீ பிஷ்வேஷ்வர் டுடு, ‘இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக ஒன்றிய அரசு இருப்பது மட்டுமில்லாமல், தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குகிறது. தண்ணீர் முறையை உறுதி செய்யும் பணியை பிரதான் மந்திரி திட்டம் செய்கிறது. விவசாய நிலங்களுக்கும் சொட்டு நீர் பாசம் செயல்படுத்தப்படுகிறது’ என தெரிவித்தார். இது  தவிர, நாட்டில் தினசரி பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் அளவு, வரி விவரம் குறித்து இவர் கேட்ட கேள்விகளுக்கும் ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்

மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் கொண்டு வந்த சிறப்பு கோரிக்கையில், ‘நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே முக்கிய இடங்களில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட இத்தனை சுங்கச்சாவடிகள் கிடையாது. இந்தியாவில் மட்டும் தான் மக்கள் இத்தகைய சூழலை அனுபவித்து வருகின்றனர். சுங்கச்சாவடி மாதாந்திர பாஸ் விலை கூட அதிகமாக உள்ளது. அதனால் மக்கள் பயன்பாட்டிற்கு எதிராக தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் முழுமையாக ரத்து செய்து மூட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

பாஸ்டாக்: வங்கிகள் நிர்பந்தம்

மாநிலங்களவையில் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் கொண்டு வந்த கோரிக்கையில், ‘சுங்கச்சாவடிகளில் நெரிசலையும், காலதாமதங்களையும் குறைக்க பயணிகள் வாகனங்களின் பாஸ்டாக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச கட்டாய வைப்பு நிதி கட்டாயம் இல்லை என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு அறிவித்தது. ஆனால், தற்போது வரையில் சில வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள பாஸ்டாக் கணக்குகளில் குறைந்தபட்ச கட்டாய வைப்பு நிதியை வைக்க நிர்பந்தித்து வருகின்றனர். ஒன்றிய அரசு இந்த விவாகரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்’ என்றார்.

இரவு நேர ரயில் சேவை

மக்களவையில் எம்பி நடராஜன் எழுப்பிய கேள்வியில், ‘கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் சேவையும், கோவை-நாகர்கோவிலில் இருந்து போத்தனூர் - பொள்ளாச்சி மற்றும் மதுரை வழியாக புதிய ரயில் இயக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா?’ என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘அப்படி திட்டங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் ஏற்கனவே கோவை - பெங்களூர் இடையே இரவு நேரத்தில் மூன்று ரயில்கள் சேவை வழங்கி வருகின்றன. மற்றும் கோவை நாகர்கோவில் இடையிலான ஈரோடு வழித்தடத்தில் 8 ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், சேலம் கோட்டத்தில் இருந்து பெறப்பட்ட பரிசீலனை எதுவும் கிடப்பில் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: