×

சபரிமலையில் நீர்க்கசிவு; தங்க கூரை சீரமைப்பு 22ம் தேதி தொடக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் தங்க மேற்கூரையிலிருந்து தண்ணீர் கசிவதை கண்டுபிடிப்பதற்கான சோதனை நேற்று நடைபெற்றது. வரும் 22 ம் தேதி முதல் சீரமைப்புப் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மூல விக்கிரகம் அமைந்துள்ள பகுதி ஸ்ரீ கோயில் என அழைக்கப்படுகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன் இக்கோயிலின் மேற்கூரை முழுவதும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. இந்நிலையில் மேற்கூரையிலிருந்து கோயிலுக்குள் தண்ணீர் கசிவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சீரமைப்புப் பணிகளை நடத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்தது.

இதன்படி தண்ணீர் எங்கிருந்து கசிகிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக நேற்று சோதனை நடத்தப்பட்டது. பிரபல வாஸ்து நிபுணரும், தேவசம் போர்டின் மூத்த ஸ்தபதியுமான ராஜு தலைமையில் சிற்பிகள் கூரையில் ஏறி சோதித்தனர். இதில் தங்க தகடுகளை இணைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள செம்பு ஆணிகளின் இடைவெளி வழியாக நீர் கசிவது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு தகடுக்கும் இடையே நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. வரும் 22 ம் தேதி முதல் சீரமைப்புப் பணிகளை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை பூஜைகளுக்கு நடை திறப்பதற்கு முன்னதாக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார்.

Tags : Sabarimala , Water leakage at Sabarimala; Gold roof renovation will start on 22nd
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு