×

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 5ம் தேதி முதல் கலந்தாய்வு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி போன்ற படிப்புகளில் சுமார் 1¼ லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி தொடங்கியது.

கடந்த சில ஆண்டுகளாகவே கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் அரசு கலை கல்லூரிகளில் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஜூலை) 27ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 மாணவ-மாணவிகள் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 பேர் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்ததோடு, அதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 பேர் கட்டணங்களை செலுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் விண்ணப்பப்பதிவு செய்திருந்தவர்களில் கட்டணங்களை செலுத்தி, முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்திருந்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. கல்லூரிகள் தரவரிசை பட்டியலை சரிபார்த்த பிறகு, அந்தந்த பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண்ணை கணக்கில் கொண்டு இறுதி பட்டியலை தயார்செய்து அவர்களுடைய இணையதளத்தில் இன்று வெளியிட இருக்கின்றனர்.

இந்த தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். கலந்தாய்வை பொறுத்தவரையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வாயிலாக நடந்து வந்தது. இந்த ஆண்டு நேரடி கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. வருகிற 5ம் தேதி முதல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித் துறை உத்தரவிட்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்கும் போது பதிவு செய்திருந்த செல்போன் எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக எந்த தேதியில் கலந்தாய்வில் பங்குபெற வேண்டும் என்று தெரிவித்து, கலந்தாய்வு நடைபெற உள்ளது. மாணவர்களின் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் எந்த ஒரு புகாருக்கும் இடமில்லாமல் கலந்தாய்வை நடத்தி முடிக்க சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு முடிந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்குவது? என்பதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும், கல்லூரிகளில் சேரும் மாணவர்களை கணினி எழுத்தறிவு திட்டம், மென் திறன் பயிற்சித் திட்டம் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் படிப்புகளில் (நான் முதல்வன் திட்டம்) சேர ஊக்குவிக்கலாம் என்றும் கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.



Tags : Government Colleges of Arts and Sciences , 5th consultation for admission in government arts and science colleges
× RELATED தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல்...