திருவண்ணாமலை மாவட்டத்தில் எடை, விலை குளறுபடி தடுக்க பருத்தி கொள்முதல் நிலையம்: விவசாயிகள் கோரிக்கை

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் பிரதான தொழிலாக விவசாயம் விளங்குகிறது. இப்பகுதியில் நெல், கரும்பு, வாழை, மணிலா ஆகிய பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக பருத்தி விவசாயம் செய்யப்படுகிறது. தரமான பருத்தி கிலோ ₹100 முதல் ₹300 வரை என  தரம் பிரித்து விற்கப்படுகிறது. ஆனால் பருத்தி கொள்முதல் நிலையம் மட்டும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள் நிர்ணயித்த விலையைத்தான் விவசாயிகள் பெறவேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பருத்தி கொள்முதல் செய்ய இத்தனை ஆண்டுகளாக மாவட்ட அளவில் எவ்வித ஏற்பாடும் இல்லை. இதனால் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று இவற்றை விற்கவேண்டிய நிலை உள்ளது. இதனை பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் எங்களிடம் இருந்து மிக குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்துகொண்டு அவற்றை ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகளுக்கு அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் எங்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. குறிப்பாக எங்களிடம் கொள்முதல் செய்யப்படும்போது எடையில் குளறுபடி செய்கின்றனர்.

மேலும் விலையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கம் நடக்கிறது. இதுபோன்ற பல குளறுபடிகளை வியாபாரிகள் செய்வதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இவற்றை தடுக்க மாவட்டத்தில் அரசு சார்பில் பருத்தி கொள்முதல் நிலையத்தை அமைக்கவேண்டும். அப்போதுதான் எங்களுக்கு சரியான எடையை அளந்து உரிய தொகை கிடைக்கும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Related Stories: