×

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: ஆற்றுக்குள் ஆடிப்பெருக்கு கொண்டாடியவர்கள் வெளியேற்றம்

திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வருவாய்த்துறையினர் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு விடுத்தனர். மேலும், திருவைகாவூர் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடியவர்களை கும்பகோணம் கோட்டாட்சியர் ஆற்றில் இருந்து வெளியேற்றினார். குமபகோணம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், ஒலிபெருக்கிகள் மூலம் கொள்ளிட கரையோரப் பகுதிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. திருவைகாவூர், குடிதாங்கி போன்ற பகுதிகளில் வருவாய் துறையினர் ஒலிபெருக்கிகள் மூலம் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள எச்சரிக்கையை மக்களுக்கு தெரிவித்தனர். சற்று நேரத்திற்கு முன்பு திருவைகாவூர் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாடிய நபர்களை கும்பகோணம் கோட்டாட்சியர் எச்சரித்து ஆற்றில் இருந்து வெளியேற்றினார். தற்போது, சுமார் 70 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் செல்வதாக கூறப்படுகிறது. இன்று மாலை முதல் 1 லட்சம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் செல்லும் என்பதால், ஆற்றில் இறக்குவதற்கோ, கால்நடைகளை மேய்ப்பதற்கோ யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

Tags : Adiper , Kollidam River, Flooding, Flooding, People, Evacuation
× RELATED கொரோனா காரணமாக வழிபாடு நடத்த தடை; களை...