கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைப்பு!: கருக்கலைப்பில் பெண் உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெரியநாயகி என்ற பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியன்று தியாகதுருகம் அடுத்த கூவாடு கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி என்பவர் கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கருக்கலைப்பு செய்ததில் அன்று இரவு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தியாகதுருகம் போலீசார், உயிரிழந்த பெரியநாயகியின் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து பெரியநாயகியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் உத்தரவின்பேரில் 3 சுகாதார குழுவினர், மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்வதற்கு முறையான சான்றிதழ் வாங்காமல், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பாலசந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.

Related Stories: