உஜ்வாலா திட்டத்தின் 9 கோடி பயனாளிகளில் 4.13 கோடி பேர் ஒரு முறை கூட ‘காஸ்’ சிலிண்டர் வாங்கவில்லை: கடும் விலை ஏற்றத்தால் தயக்கம்

புதுடெல்லி: உஜ்வாலா திட்ட பயனாளிகளில் 4.13 கோடி பேர் கடும் விலை ஏற்றத்தால் ஒரு முறை கூட ‘காஸ்’ விலை கொடுத்து வாங்கவில்லை என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின்  உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இலவச காஸ் இணைப்பும், மானியத்துடன் கூடிய காஸ் விநியோகம் செய்யப்படுகிறது.

பயனாளிக்கு ஒன்றிய அரசின் மானியம் கிடைத்தாலும் கூட, அவர்களில் கோடிக்கணக்கான மக்கள் காஸ் சிலிண்டர்களை நிரப்புவதில்லை. காரணம், வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அவர்கள் காஸ் சிலிண்டர்களை விலை கொடுத்து வாங்குவதில்லை. மேலும் மலைகிராம மக்களுக்கு சரியான முறையில் காஸ் விநியோகம் செய்வதும் இல்லை.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி, ‘கடந்த மே 21ம் தேதி முதல் 2022-23 நிதியாண்டில் ஆண்டுதோறும் 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. மேலும் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்குகிறது. நாடு முழுவதும் 9 கோடி பயனாளிகளுக்கு இலவச காஸ் இணைப்பு கொடுக்கப்பட்டது. 7.67 கோடி பயனாளிகளுக்கு ஒருமுறை காஸ் நிரப்பி உள்ளனர்.

ஆனால், அவர்கள் தொடர்ந்து காஸ் சிலிண்டர்களை பெறுவதில்லை. அந்த வகையில் 2017-18ம் ஆண்டில் 46 லட்சம் பயனாளிகளும், 2018-19ம் ஆண்டில் 1.24 கோடி பேரும், 2019-20ல் 1.41 கோடி பேரும், 2020-21ல் 10 லட்சம் பேரும், 2021-22ல் 92 லட்சம் பேரும் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் மொத்த பயனாளிகளில் 4.13 கோடி பேர் ஒரு முறை கூட காஸ் வாங்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 9 கோடி பயனாளிகளில் 4.13 கோடி பேர் காஸ் சிலிண்டர்களை வாங்காதது, இத்திட்டதில் உள்ள பின்னடைவை காட்டுகிறது.

Related Stories: