×

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு; எம்எல்ஏ கார் மீது கல்வீச்சு: அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்

புனே: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத்தின் ஆதரவு எம்எல்ஏ கார் மீது கல் வீசி தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சிவசேனா அதிருப்தி தலைவரும், முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏ உதய் சமந்த் என்பவர், புனே அடுத்த கட்ராஜ் சவுக் பகுதிக்கு காரில் சென்றார். அப்போது அவரது காரை நோக்கி சிலர் கற்களை வீசினர். அதனால் அவரது காரின் கண்ணாடிகள் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக உதய் சமந்த் காயமின்றி தப்பினார். எம்எல்ஏ கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து உதய் சமந்த் கூறுகையில், ‘இதுபோன்ற சம்பவங்களை கண்டு நான் பயப்பட மாட்டேன். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் பேசி, சம்பவம் குறித்து கூறினேன். முழு சம்பவம் குறித்து போலீசார் விசாரிப்பார்கள்’ என்றார். மேற்கண்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ‘எம்எல்ஏ மீதான தாக்குதல் மிகவும் கோழைத்தனமான செயல். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது எங்கள் பொறுப்பு. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க யாராவது முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் அமைதி காக்க வேண்டும்’ என்றார்.



Tags : Chief Minister ,Eknath Shinde ,Stone ,MLA , Chief Minister Eknath Shinde's support; Stone pelted on MLA's car: Luckily he escaped unhurt
× RELATED பா.ஜ.க. திட்டத்தால் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி..!!