மத்திய பிரதேச வனப்பகுதியில் விறகு பொறுக்கிய இடத்தில் ‘வைரக்கல்’ அதிர்ஷ்டம்: 8 குழந்தைகளின் தாய்க்கு வறுமை நீங்கியது

பன்னா: மத்திய பிரதேச வனப்பகுதியில் விறகு பொறுக்கிய பெண்ணுக்கு, வைரக்கல் சிக்கியதால் எட்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்பட்ட அவரது குடும்பத்தின் வறுமை நீங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பன்னா நகரை ஒட்டியுள்ள புருஷோத்தம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஜெந்தா பாய் (50). இவர் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விறகு ெபாறுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கல் ஒன்று ஒளிர்விட்டு மின்னிக் கொண்டு காணப்பட்டது. உடனே ஜெயந்தா பாய், அந்தக் கல்லை வீட்டுக் கொண்டு வந்தார். பின்னர் தனது கணவர் பரம்லாலிடம் அந்தக் கல்லை காட்டினார். அவர், கோட்வாலியில் உள்ள அரசின் வைர கற்கள் அலுவலகத்தில் காட்டினார். அதிகாரிகள் பரிசோதித்ததில், அந்த கல், 4.39 காரட் எடையுள்ள ரத்தினத் தரம் வாய்ந்த வைரம் என்றும், இந்த வைரத்தின் மதிப்பு 15 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறினர்.

அதிகாரிகள் கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த ஜெயந்தா பாய் கூறுகையில், ‘எனக்கு கிடைத்த வைரத்தை கொண்டு, எனது மகள்களின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவேன். எனது கணவர் கூலி செய்கிறார்; எங்களுக்கு 6 மகன்கள் 2 மகள்கள் என 8 குழந்தைகள் உள்ளனர். பெரிய குடும்பம் என்பதால் வருவாய் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தோம். உணவு சமைப்பதற்காக விறகு எடுக்க காட்டுக்குச் சென்றபோது, வைரக் கல் என் கண்ணில் பட்டது. தற்போது அந்தக் கல், எங்களது எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டது’ என்றார்.

இதுகுறித்து வைர அலுவலக அதிகாரி அனுபம் சிங் கூறுகையில், ‘புருஷோத்தம்பூர் கிராமத்தில் வசிக்கும் ஜெயந்தா பாய் கொண்டுவந்த ரத்தினத் தரம் வாய்ந்த வைரத்தின் எடை 4.39 காரட் ஆகும். இந்த வைரம் தரமானதாக இருப்பதால் ஏலத்தில் நல்ல விலை கிடைக்கும். இதன் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். வரும் ஏலத்தின் போது,  இந்த வைரக் கல் விற்பனைக்கு விடப்படும். அதன்மூலம் கிடைக்கும் தொகையில், அரசுக்கான ராயல்டியை கழித்து, மீதமுள்ள தொகை முழுவதும் வைரத்தை கொண்டு வந்த ஜெந்தா பாய்க்கு கிடைக்கும்’ என்றார்.

Related Stories: