புளியங்குடியில் பெரியார் குறித்து அவதூறு வீடியோ: பாஜ நிர்வாகி கைது

புளியங்குடி: புளியங்குடியில் பெரியார் குறித்து அவதூறு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார். சென்னையில் கடந்த 28ம்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போது அவரது வரவேற்பு பேனர்களில் சிலர் கரி பூசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த பாஜ நிர்வாகி, ‘பெரியார் சிலைகளை அவதூறு செய்ய வேண்டும், சிலைகளை உடைக்க வேண்டும்’ என வீடியோ வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

புளியங்குடி டிஎஸ்பி அசோக் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், வீடியோ வெளியிட்டவர் புளியங்குடி அருகே தாருகாபுரம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் (28) என்பதும், பாஜ விளையாட்டு மேம்பாட்டு துறை தலைவராக இருந்து வருவதும் தெரிந்தது. இதனையடுத்து கிருஷ்ணனை கைது செய்து சிறையிலடைத்தனர். இவர் ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் பற்றியும், திமுக பற்றியும் அவதூறாக பேசி கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: