தாயை பரிசோதித்துவிட்டு திரும்பிய போது ஆஸ்பத்திரியில் நடிகர் மீது தாக்குதல்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

காஜியாபாத்: காஜியாபாத் மருத்துவமனையில் தனது தாயை பரிசோதித்துவிட்டு திரும்பிய போது மர்ம நபர் ஒருவர் நடிகர் பிரியாங்க் சர்மா என்பவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியை சேர்ந்த நடிகர் பிரியாங்க் சர்மா என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயை அழைத்துக் கொண்டு உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மருத்துவமனையில் இருந்து அவர் திரும்பிய போது மர்ம நபரால் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக கவுசாம்பி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் ஐபிசி 322ன் கீழ் வழக்குபதிந்து, பிரியங்க் சர்மாவை தாக்கிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரியாங்க் சர்மா கூறுகையில், ‘உடல்நலம் பாதிக்கப்பட்ட என் தாயை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். என்னுடன் என் தந்தையும் வந்திருந்தார். பரிசோதனைக்குப் பிறகு, நாங்கள் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று எங்கிருந்தோ இருந்து வந்த நபர், என்னைத் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அங்கிருந்த சிலர் என்னை காப்பாற்றினார்கள். நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். என் பெற்றோர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனை நிர்வாகத்தினர் எங்களுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கவில்லை. எனக்கு உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டன. எதற்காக என்னை அந்த நபர் தாக்கினார் என்பது தெரியவில்லை’ என்றார்.

Related Stories: