வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3வது டி20 போட்டி: சூர்யகுமார் 360 டிகிரி ஆட்டம் இந்தியா அபார வெற்றி

பாசட்டரே: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் இந்தியா, 2வதுபோட்டியில் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்ற நிலையில் 3வது ஆட்டம் நேற்றிரவு நடந்தது.  இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ்அணியில் பிராண்டன் கிங்-கைல் மேயர்ஸ் 57 ரன் சேர்த்த நிலையில் கிங் 20 ரன்னில் பாண்டியா பந்தில் போல்டானார். அடுத்து வந்த கேப்டன் பூரன் 22ரன்னில்(23 பந்து) வெளியேற கைல் மேயர்ஸ் 50 பந்தில் 8பவுண்டரி,4சிக்சருடன் 73 ரன் அடித்தார். ரோவ்மேன் பவல் 23 (14பந்து), ஹெட்மயர் 20 ரன் (12பந்து) எடுத்து அவுட் ஆகிறது. 20 ஓவரில் வெ.இண்டீஸ் 5விக்கெட் இழப்பிற்கு 164ரன் எடுத்தது. இந்திய பவுலிங்கில் புவனேஸ்வர்குமார் 2, ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 165ரன் இலக்கை துரத்திய இந்திய அணியில், கேப்டன் ரோகித்சர்மா, சூர்யகுமார்யாதவ் அதிரடியாக தொடங்கினர். அல்சாரி ஜோசப் வீசிய 2வதுஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ரோகித்சர்மா, முதுகுவலி காரணமாக ரிட்டையர்ஹாட் முறையில் வெளியேறினார். பின்னர் ஸ்ரேயாஸ்- சூர்யகுமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சூர்யகுமார் 360 டிகிரி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெ.இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தார். அணியின் ஸ்கோர்  105ஆக இருந்தபோது ஸ்ரேயாஸ் 24ரன்னில் ஸ்டெம்பிங் ஆனார். 26பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார், 44பந்தில், 8பவுண்டரி,4சிக்சருடன் 76ரன் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 4 ரன்னில் கேட்ச் ஆன நிலையில் 19ஓவரில் 3விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்த இந்தியா 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பன்ட் 33(26பந்து), தீபக் ஹூடா 10 ரன்னில் களத்தில்  இருந்தனர். சூர்யகுமார் ஆட்டநாயகன் விருது பெற்றார் .இந்த வெற்றி மூலம் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்க கடைசி 2 போட்டி வரும் 6 மற்றும் 7ம்தேதி அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அடுத்த போட்டிக்குள் தயாராகி விடுவேன்: வெற்றிக்கு பின் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது; எனது  உடல் நலமாக உள்ளது, அடுத்த போட்டிக்கு சில நாட்கள் உள்ளதால் அதற்குள்  சரியாகிவிடும் என்று நம்புகிறேன். இன்று மிடில் ஓவர்களில் நாங்கள் நன்றாக  பந்து வீசினோம். அது முக்கியமானதாக இருந்தது.  இது எளிதான இலக்கு அல்ல,  ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. சூர்யகுமார் சிறப்பாக  ஆடினார். ஸ்ரேயாசுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். வெளியில் இருந்து  பார்க்கும் போது அதிக ரிஸ்க் எதுவும் எடுக்கப்படவில்லை என்றுதெரியும்.  ஆனால் சரியான பந்துகளில் ஷாட்களை எடுப்பதுமுக்கியமானது, என்றார்.

Related Stories: