×

தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் 87 பெண்கள் மயங்கியதால் பரபரப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருமலை: தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில், பணியில் இருந்த 87 பெண்கள் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் அச்யுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 500 பேர் வேலை செய்கின்றனர். நேற்று மாலை 6 மணியளவில் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். பலர் வாந்தி எடுத்தபடி சுருண்டு விழுந்தனர். அடுத்தடுத்து 87 பேர் மயங்கி விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள், தங்களது மேலதிகாரிகளுக்கு தெரிவித்தனர். உடனே அவர்களை மீட்டு அதே தொழிற்சாலையில் உள்ள சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றனர். முதலுதவி சிகிச்சை அளித்து அனகாப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என பலதரப்பினரும் மருத்துவமனை முன் திரண்டனர்.

தகவலறிந்து அனகாப்பள்ளி எஸ்.பி கவுதமிஷாலி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். இதனிடையே தொழிற்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் செய்யாததால் இதுபோன்ற விபத்து ஏற்பட்டதாக கூறி பல்வேறு கட்சியினர், தொழிற்சாலை முன் திரண்டு கோஷமிட்டனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பினர்.

Tags : 87 women fainted after gas attack in factory: Intensive treatment at hospital
× RELATED ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில்...