×

சென்னையில் நடக்கும் செஸ் போட்டியில் வெற்றி பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பந்தலூர் : மாநில அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற தேவாலா பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலாவில் அரசு  பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சென்னையில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, இவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. முன்னதாக, மேளம் தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை  சுசீலா தலைமை வகித்தார். முன்னாள் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவரும், நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலருமான ஆலன், கவுன்சிலர் சூரியகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன், நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் இவ்விழாவில் செஸ் போட்டியில் மாநில அளவில்  வெற்றிபெற்ற 10ம் வகுப்பு மாணவர் செந்தூரன் மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற 10ம் வகுப்பு மாணவர் ஸ்ரீகுமார், 8ம் வகுப்பு மாணவர் சத்தியநிதி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.தொடர்ந்து, தலைமை ஆசிரியர் பேசுகையில்,``எங்கள் பள்ளி மாணவர்கள், செஸ் போட்டியில் கலந்துகொண்டு பழங்குடியினர் பள்ளி சார்பில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக அரசு மற்றும் துறை அமைச்சர் சென்னையில் நடந்த போட்டியில் மாணவர்கள் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவர் செந்தூரன், ரஷ்யாவின் கிரேன் மாஸ்டர் மிக்கல் கேப்லியூவுடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது. மேலும், அனைத்து நாட்டின் விளையாட்டு வீரர்கள் விளையாடும் போட்டியை பார்த்து ரசிக்க பார்வையாளராக பங்கேற்றது பெருமையாக உள்ளது’’ என்றார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் பாபு என்ற விஜயகுமார், அதிமுக தலைமை பேச்சாளர் கூடலூர் ராமமூர்த்தி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோடீஸ்வரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Chennai , Bandalur: Dewala tribal school students who won the state level chess competition were felicitated and felicitated.
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...