×

ஆம்பூர் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து இறந்த மாணவன் சடலத்தை டோலி கட்டி தூக்கி சென்ற மக்கள்-சாலை அமைக்க கோரிக்கை

ஆம்பூர் :  ஆம்பூர் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்த பள்ளி மாணவன் சடலத்தை மக்கள் டோலி கட்டி தூக்கி சென்றனர். தங்கள் கிராமத்துக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சி பொன்னப்பள்ளி ஸ்கூல்தோப்பு இருளர் பகுதியை சேர்ந்தவர் சிவா, கூலித்தொழிலாளி. இவரது மகன் அர்ஜூன் என்கிற அஜீத்குமார்(12) அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் காலை அப்பகுதியில் பலத்த மழைபெய்தது. அப்போது மாணவன் அர்ஜூன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அவனை பாம்பு கடித்துள்ளது.

மயங்கி விழுந்த மாணவனை பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் இறந்தான். இதையடுத்து மாணவன் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், மாணவன் சடலத்தை உமராபாத் ேபாலீசார் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். சடலத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் தங்கள் பகுதிக்கு வாகனத்தில் கொண்டு சென்றனர்.

அப்போது அவர்கள் வசிக்கும் பகுதி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி என்பதாலும், சாலை வசதி இல்லாததாலும் இரவு நேரத்தில் விவசாய நிலத்தின் வழியாக டோலி கட்டி கொட்டும் மழையில் சடலத்தை கொண்டு சென்றனர். எனவே அரங்கல்துருகம் ஊராட்சி பொன்னப்பள்ளி இருளர் பகுதிக்கு சாலை அமைத்து தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆறுதல் கூறிய கலெக்டர்

பாம்பு கடித்து உயிரிழந்த மாணவன் அர்ஜூன் குடும்பத்தினரை நேற்று மதியம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், வாணியம்பாடி ஆர்டிஓ பிரேமலதா, தாசில்தார் மகாலட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Ambur , Ambur: People carried away the body of a school student who was bitten by a snake while playing near Ambur. to their village
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...