சிவகாசி அருகே மீனாட்சி கோயில் புதுப்பிக்கும் பணி தீவிரம்-மகிழ்ச்சியில் பக்தர்கள்

சிவகாசி : சிவகாசி அருகே ஈஞ்சாரில் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் புதிய சிலைகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருவதால் சிவ பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகாசியிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது ஈஞ்சார் கிராமம். இக்கிராமத்தில் கிபி 1236ல் பாண்டிய மன்னர்களில் ஒருவரான, மறவன்மணி சுந்தரபாண்டியர் காலத்தில் கட்டிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. மூலவராக சிவன், சக்தியாக மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், அய்யனார் போன்ற 18 சுவாமி சிலைகள் இருந்துள்ளன. கோயிலை சுற்றி கலை நயமிக்க கல்வெட்டுகள், சித்திரங்கள், அழகோவிய சிலைகளும் இருந்துள்ளன. அதுமட்டுமின்றி அழகிய தோட்டங்கள், ரதவீதிகள், தாமரைக்குளம் என பெரிய நகரம் கட்டமைக்கப்பட்டு இருந்துள்ளதாக தெரியவருகிறது.

போர் காலத்தில் மன்னர் மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பிச்செல்ல கோயிலில் சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது, அத்துடன் மன்னர் குடும்பத்தினர் மறைந்து வாழும் இடமாகவும், பொன், பொருள் பாதுகாக்கும் இடமாகவும் இந்த கோவில் இருந்து வந்துள்ளது.இவ்வளவு பழமை வாய்ந்த இந்த கோயிலில் பல ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை, இதனால் கோயில் பாழடைந்து வந்தது. காலப்போக்கில் கோயிலில் இருந்த பழமையான சிலைகளும் மாயமாகி விட்டன. இங்குள்ள சுவாமி சிலைகள் திருடப்பட்டு உள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலை சீரமைக்க வேண்டும் என்று சிவ பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

தற்போது ஈஞ்சார் கிராம மக்கள் சார்பாக கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. மூலவர் சிலை, விநாயகர், சனீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகன் ஆகிய மூலவர்களின் புதிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பழமை வாய்ந்த இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டு வருவதால் கிராம மக்களும் சிவ பக்தர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நந்தி சிலை மட்டுமே மிஞ்சியது

இந்த கோயிலில் 2017ல் மூலவர் சிலை திருடு போனது. திருத்தங்கல் போலீஸ் வழக்குப்பதிவு செய்தும் கண்டுபிடிக்கவில்லை. இதற்கிடையே நந்தி சிலையை கடத்த முயன்றவர்களை பொதுமக்கள் விரட்டி அடித்துள்ளனர். இதுபோல் சிலைகள் திருடு போனதால் கோயில் கட்டமைப்பும் உள்ளே ஒரு நந்தி சிலையும் மட்டுமே இருந்தது. இதையடுத்து தற்போது கிராம மக்கள் மூலவர் சிலை மற்றும் பரிகார தேவதைகள் சிலைகளை புதிதாக வைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை - திருவில்லி சுரங்கப்பாதை

ஈஞ்சார் கிராம மக்கள் கூறும்போது, ‘‘எங்கள் கிராமத்தில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் இருப்பது பெருமையாக உள்ளது. கோயில் மூலவர் சன்னதியின் கீழ் பாதாள சுரங்கம் உள்ளதாக நம்பப்படுகின்றது. இது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவில்லி ஆண்டாள் கோயில் செல்வதற்கான வழியாக உள்ளது என்றும் கூறப்படுகின்றது. கோயிலோ எந்தவித பராமரிப்பும் இன்றி கேட்பாரற்று கிடந்தது. தற்போது நாங்களே பக்தர்களிடம் நிதி வசூல் செய்து கோயிலை புதுப்பித்து வருகின்றோம்’ என்றனர்.

Related Stories: