×

ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் திமுகவின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் ஏற்பு!: குற்றச்சாட்டுகளை நிரூபித்து வெற்றி காண்போம்..ஆர்.எஸ்.பாரதி பேட்டி..!!

சென்னை: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் திமுகவின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்பட்டுள்ளது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி, ஊழல் புகார் குறித்து நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றார். எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரிக்கும். திமுக தொடுக்கும் அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஏற்கனவே 1995ல் இருந்து திமுக போட்ட பல வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர். நியாயமான விசாரணை வேண்டும் என்று தான் கோரினோமே தவிர சிபிஐ விசாரணை தேவை என கோரவில்லை. உரிய முறையில் விசாரணை நடக்க வேண்டும்; யார் விசாரிக்க வேண்டும் என்பதில் கவலையில்லை. டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. திமுக யார் மீதும் வீண் பழி சுமத்தாது; குற்றச்சாட்டுகளை நிரூபித்து வழக்கில் வெற்றி காண்போம்.

நேற்று வேலுமணி, இன்று எடப்பாடி பழனிசாமி, நாளை கோடநாடு என்று வரும் நாட்களில் பல வழக்குகளை பார்க்க உள்ளீர்கள் என தெரிவித்தார். 2016ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டது குறித்து சிபிஐ இதுவரை விசாரிக்கவில்லை என்றும் ஆர்.எஸ்.பாரதி  கூறினார். எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Supreme Court ,DMK ,EPS ,RS Bharti , EPS, tender malpractice, DMK, Supreme Court, RS Bharati
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...