×

விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறியது ஆழியார் பாசன கால்வாய்கள் சீரமைக்க ரூ.8 கோடி-பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி :  ஆழியார் திட்ட பாசன கால்வாய்கள் சீரமைக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சியை அடுத்த பிஏபி திட்டத்திற்குட்பட்ட சோலையார், ஆழியார், பரம்பிக்குளம், திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேரும் தண்ணீர் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதிக்குட்பட்ட சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகிறது. அந்த அணைகளின் நீர் ஆதாரத்தை பொறுத்து, அவ்வப்போது விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

  இதில், ஆழியார் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட வேட்டைக்காரன் புதூர் கால்வாய், கால்வாய், பொள்ளாச்சி கால்வாயும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதி என சுமார் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. ஆனால், கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிஏபி திட்ட கிளை வாய்க்கால்கள் பல இடங்களில் இன்னும் புதர் மண்டி, பழுதான நிலையில் உள்ளது.

 இதில், சில வாய்க்கால்களில் மண், கற்கள் குவிந்து மாயமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக, கிளை வாய்க்கால்களில் அவ்வப்போது தண்ணீர் திறப்பு இருக்கும் வேளையில், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்றும், கடை மடை விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுகிறது.

 கிராம பகுதி வழியாக செல்லும் பிஏபி வாய்க்கால்களில் பழுதான இடங்களை கண்டறிந்து, அதனை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், பிஏபி கிளை வாய்க்கால்களை முழுமையாக பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பேச்சுடன், அதற்கான செயல்பாடு நின்று போவதாக புகார் எழுகிறது.

 அதிலும், ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் பெரும்பாலான கிளை கால்வாய்கள் அதிகளவு புதர் சூழ்ந்திருப்பதுடன், ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பிஏபி கிளை கால்வாய்களை முறையாக பராமரிக்காமல் விட்டுள்ளதால் தற்போது பல்வேறு கால்வாய்கள் சிதலமடைந்து வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசன சங்க செயலாளர் செந்தில்குமார் கூறுகையில்,‘`பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தென்னைக்கு அடுத்தப்படியாக, மானாவாரி விவசாயம் அதிகமாக நடக்கிறது. பருவமழை ஒருபக்கம் இருந்தாலும் இந்த பகுதி விவசாயிகள், பிஏபி பாசன நீரையே நம்பியுள்ளனர். ஆனால், பல ஆண்டுக்கும் மேலாக, பிஏபி திட்ட கிளை வாய்கால்களில் பராமரிப்பு பணி நடக்காமல் உள்ளது.

 இதனால், வாய்க்கால்கள் நாளுக்குநாள் சேதமடைந்து தண்ணீர் அதிகளவில் விரயமாகி வருகிறது. அதுமட்டுமின்றி, பழுதடைந்து மற்றும் புதர் மண்டிய கிளை வாய்க்கால்களின் பல இடங்களில் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்து உடைப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளது. சுமார் 5 ஆண்டுக்கு முன்பு, பொள்ளாச்சி வழியாக செல்லும் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்குட்பட்ட கிளை வாய்க்கால்களில் ஒரு சில இடங்களில் மட்டும் ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளை கொண்டு பணிகள் நடைபெற்றது.

 அதன்பின் ஊரக வேலையுறுதி திட்ட பயனாளிகள், அல்லது பொதுப்பணித்துறை மூலமோ பராமரிப்பு பணிகள் நடைபெறாததால், கிளை கால்வாய் புதர்மண்டி மாயமான நிலையில் உள்ளது. சில ஆண்டுக்கு முன்பு, குடிமராமத்து பணி முலம் கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்றாலும், அந்த பணியும் முழுமையாக நிறைவடையாமல் போனது.   அதுபோல், ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளான காரபட்டி, அரியாபுரம், வடக்கலூர், பெரியணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிஏபி கிளை வாய்க்கால்களில் முழுமையாக தூர்வாரப்படாமலும், பழுதான பகுதிகளை சீர்படுத்தப்படாமலும் உள்ளது.

  பல்வேறு கிராமங்கள் வழியாக சுமார் 60 கிமீ மேல் உள்ள, ஆழியார் பாசன கிளை கால்வாய்களை சீரமைப்பு செய்யப்படும் என்ற நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் கிளை வாய்க்கால்களை தூர்வாரி சீரமைத்தால் மட்டுமே அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் விரயமாகாமல் கடைமடை விவசாயிகளுக்கு முறையாக பகிர்ந்தளிக்க முடியும். அதற்கான துரித நடவடிக்கையில் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும்’’ என்றார்.

 பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,``பிஏபி திட்டத்திற்குட்பட்ட பிரதான கால்வாய்கள் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பராமரிக்கப்படுகிறது. கிளை வாய்க்கால்களும் அவ்வப்போது பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சில ஆண்டுக்கு முன்பு குடிமராமத்து பணி மூலம், பல கிமீ தூரத்துக்கு பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இன்னும் பல இடங்கிளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எங்கெங்கு கால்வாய் சேதமைந்துள்ளது, தூர்வாருவது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேதமான பிஏபி கிளை கால்வாய்களை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, சுமார் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதில், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வாய்க்கால் சீரமைக்க ரூ.4 கோடியும், பிடர் கால்வாய் சீரமைக்க ரூ.52 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Tags : Bhayar ,PSU , Pollachi: Public Works Department officials have said that Rs.
× RELATED நேருவைப் பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது? : கே.எஸ். அழகிரி கேள்வி