தொடர் மழை காரணமாக பசுமையாக காட்சியளிக்கும் முதுமலை புலிகள் காப்பகம்-சாலையோரம் உலா வரும் விலங்குகள்

ஊட்டி : தொடர் மழை காரணமாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் சாலையோரங்களில் வலம் வருகின்றன. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ பரப்பில் அமைந்துள்ளது. இங்கு புலிகள் மட்டுமின்றி காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடி, காட்டு எருமைகள், பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு வகை பறவைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இதுதவிர விலை உயர்ந்த தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் அதிகளவு உள்ளன.

இப்புலிகள் காப்பகம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் எல்லையில் அமைந்து உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கிருந்து வனப்பகுதிக்கு யானை சவாரி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், யானை சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு ஆர்வத்துடன் வருகின்றனர்.

இப்புலிகள் காப்பகம் வழியாக தொரப்பள்ளி - கக்கநல்லா சாலை மற்றும் மசினகுடி - தெப்பக்காடு ஆகிய இரு சாலைகள் செல்கின்றன. இச்சாலைகள் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் சிறிய மரங்கள் நன்கு வளர்ந்து பசுமை திரும்பியுள்ளது.

புலிகள் காப்பகத்திற்கு நடுவே ஓடும் மாயாற்றிலும் தண்ணீர் அதிகமாக செல்கிறது. இங்குள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளன. இதையடுத்து, வனங்களும் பசுமையாக காணப்படுவதால் கரடி, மான், யானை போன்ற வன விலங்குகள் சாலையோரங்களில் உலா வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து பெரும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

Related Stories: