×

குன்னூர்- ஊட்டி இடையே நெரிசலை தவிர்க்க ரூ.40 கோடியில் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணி-சுற்றுலா பயணிகள் எளிதில் பயணிக்கலாம்

குன்னூர் : குன்னூர் - ஊட்டி இடையே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய புறவழிச்சாலை திட்டம் தயாராகிறது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது நீலகிரி. சுற்றுலாவிற்கு பிரசித்தி பெற்ற மாவட்டமாக உள்ளது. வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக வர‌ வேண்டும் என்றால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ‌குன்னூர் வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாகவும் வரலாம்.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் மக்கள் கூடலூர் வழியாக பயணித்து வருகின்றனர்.  பெரும்பாலான மக்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக பயணித்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகின்றனர். சுற்றுலா தலமாக நீலகிரி விளங்குவதால் கார், பஸ்சில் சாலை பயணத்தையே பெரிதும் விரும்புவர். அண்டை மாவட்டங்களான கோவை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டூவீலர்களில் வந்து செல்வோரும் உண்டு. அப்போதுதான் வழிநெடுக மலைப்பாதையில் இயற்கை காட்சிகளை மிக அண்மையில் ரசிக்க முடியும் என்பதே இதற்கு காரணம்.  

குறிப்பாக, ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவர். இதனால், சாலை போக்குவரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, குன்னூர் முதல் உதகை செல்லும் சாலை பள்ளத்தாக்குகள் நிறைந்து பகுதி என்பதால் கோடை சீசன் காலங்களில் விரைவாக வாகனங்களை இயக்க முடியாமல், கவனத்துடன் பயணிக்க வேண்டும் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிடுகிறது. சில நேரங்களில் பெரும் விபத்து சம்பவங்கள் நிகழ்வதும் உண்டு.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சீசன் காலங்களில் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு தரமான மாற்றுப்பாதை ஒன்று உருவாக்க மாநில நெடுஞ்சாலை துறையினர் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூர் பகுதிக்கு செல்லாமல் நேரடியாக ஊட்டிக்கு செல்லும் வகையில் ரூ.40 கோடியில் புறவழிச்சாலை தரமாக அமைப்பது குறித்தும் திட்டமிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில்,``நீலகிரியில் சீசன் காலங்களில் பெரும் தலைவலியாக இருக்கும் .வாகன நெரிசலை தவிர்க்க புதிய‌‌ முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூர் செல்லாமல் ஊட்டிக்கு செல்ல மாற்றுப்பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, புதிதாக உருவாக்கப்படும் மாற்றுப்பாதையில் மேட்டுப்பாளையம் இருந்து குன்னூர் மலைப்பாதையில் வரும்‌ வாகனங்கள்  காட்டேரி, சேலாஸ், கெந்தளா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்தி பேட்டை வழியாக ஊட்டிக்கு செல்லும். சுமார் 20.5 கிமீ தொலைவு கொண்ட இந்த சாலை குறுகலான சாலை என்பதால் நெடுஞ்சாலை துறையினர் இருபுறமும் உள்ள பகுதிகளை மீட்டு சாலையை அகலப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

இதையடுத்து, சுமார் ரூ.40 கோடியில் புதிய மாற்றுச்சாலை தரமாக அமைக்கும் பணி மும்முரமாக துவங்கியுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் சார்பில் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் பணிகளை நிறைவு செய்வது என தீர்மானித்துள்ளனர். முதற்கட்டமாக, மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் என மொத்தம் 138 கல்வெட்டுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளில் சுமார் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தவும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மற்ற துறைகள் ஒருங்கிணைப்புடன் அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் குறிப்பிட்டனர்.
இந்த மாற்றுச்சாலை விரிவாக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் தயாரானால், ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எவ்வித டென்சனும் இன்றி, பயணிக்க வாய்ப்பு ஏற்படும். இதனால், இந்த சாலை பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதே உண்மை.

மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்துமா?

மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூர் செல்லாமல், காட்டேரி, கேத்திபாலாடா, காந்திபேட்டை வழியாக ஊட்டிக்கு செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைக்கப்படும் பட்சத்தில், மலைகளின் இளவரசியான ஊட்டிக்கு சிரமமின்றி சுற்றுலா பயணிகள் வந்து செல்ல முடியும். மேலும், இனி வரும் காலத்தில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக நீலகிரிக்கு வரும் பயணிகள் கூட்டம் பலமடங்கு அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டும் தொலைநோக்கு பார்வையுடன் புதிய, மாற்றுச்சாலை அமைவது என்பது காலத்தின் கட்டாயமாகும். குன்னூர் வழியாக ஊட்டிக்கு தற்போதுள்ள சாலையில் 1 மணிநேரம் பயணிக்க வேண்டும். ஆனால், புதிய மாற்றுச்சாலை வழியாக அரை மணி நேரத்தில் ஊட்டியை சென்றடையலாம். இதனால், இப்பணிகளில் எவ்வித தேக்கமும் ஏற்படாமல், விரைந்து பூர்த்தி செய்ய, நீலகிரி மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையினரும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Coonoor ,Ooty , Coonoor: A new bypass project at a cost of Rs. 40 crore is planned by the State Highway Department to avoid traffic congestion between Coonoor and Ooty.
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில்...