×

அதி கனமழைக்கு வாய்ப்பு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை-தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்தது

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி 2 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்யும். பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கும். அதேபோல், குடியிருப்புக்களின் மீது மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்படும். சில சமயங்களில் சிறியது முதல் பெரிய நிலச்சரிவுகளும் ஏற்படும்.

இதனை சமாளிக்க மீட்பு பணிகளை மேற்கொள்ள மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்படும். இவர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வர். இதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி 2 மாதங்கள் ஊட்டியில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும். இச்சமயங்களில் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்படும். உள்ளூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உட்பட பல்வேறு அரசுத்துறை ஊழியர்களை கொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்ளப்படும்.

இருந்தபோதும், பாதிப்புகள் அதிகம் இருந்தால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளை மேற்கொள்ளப்படும். இதேபோல், புயல் சின்னம் ஏற்பட்டாலும், நீலகிரி மாவட்டத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தாலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நீலகிரியில் ஊட்டி, கூடலூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து, பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரை வரவழைத்து பணிகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கொண்டது.

இந்நிலையில், தமிழகத்தில் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று நீலகிரி மாவட்டம் உட்பட மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளுக்கும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நீலகிரி எஸ்ஐ பிரதீப்குமார், சஞ்சீவ் தேஸ்வால் தலைமையில் நேற்று 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்த பின்னர், 22 பேர் கொண்ட இரு குழுவாக பிரிந்து ஒரு குழு குந்தா தாலுகாவிற்கும், ஒரு குழு கூடலூர் தாலுகாவிற்கும் சென்று முகாமிட்டுள்ளது.
இது குறித்து நீலகிரி கலெக்டர் கூறியதாவது:

 நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள 456 நிவாரண முகாம்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறையினரும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் மழை அதிகம் பெய்யக்கூடும் என்பதற்காக நாடுகாணி - நிலம்பூர் சாலையில் இரவு நேர போக்குவரத்தை மலப்புரம் மாவட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளது.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் இருந்து செல்லும் பயணிகள் இரவு 9 மணிக்கு முன்னதாக கேரள மாநிலத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன மழை பெய்தால், அதனை எதிர்கொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

ரெட் அலர்ட்

நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று ஆரஞ்சு அலார்ட்டும், இன்று ரெட் அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும், குறிப்பாக, குந்தா மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் இன்று (3ம் தேதி) துவங்கி நாளை வரை மிக அதிகனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து, கனமழை பெய்தால் இப்பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

ரப்பர் படகுகள், மீட்பு உபகரணங்கள்

தேசிய பேரிடர் மீட்பு குழுவில் இடம்பெற்றுள்ள எஸ்ஐ பிரதீப் குமார் கூறுகையில்,‘‘நீலகிரி மாவட்டத்தில் நாளை  (இன்று) அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  இதைத்தொடர்ந்து, மீட்பு பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து 44 பேர்  கொண்ட 2 குழுவினர் நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளோம். மீட்பு பணிகளை  மேற்கொள்ள தேவையான ரப்பர் படகுகள், மரங்களை அறுக்க இயந்திரங்கள் மற்றும்  மீட்பு உபகரணங்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் 2 குழுவாக  பிரிந்து குந்தா மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் மீட்பு பணிகளை  மேற்கொள்ளவுள்ளோம்’’ என்றார்.

போக்குவரத்துக்கு தடை

கூடலூரை ஓட்டியுள்ள கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெட் அலர்ட் அறிவிப்பு விடப்பட்டுள்ளது. மலைப்பகுதிகள் நிறைந்த இப்பகுதிகளில் கனமழையால் மண்சரிவு அபாயம் உள்ளது. இதனால், அந்த பகுதியில் இரவு நேர போக்குவரத்தை மலப்புரம் மாவட்ட நிர்வாகம் தடை செய்து அறிவித்து உள்ளது.

குறிப்பாக, நாடுகாணியில் இருந்து  கேரள எல்லை எடக்கரா பகுதி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து தடை செய்துள்ளது. இந்த தடை 2 நாட்கள் அமலில் இருக்கும். அதன்பின், மழையின் தாக்கத்தை தொடர்ந்து மறு அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

இதனால், தமிழக எல்லையான  நாடுகாணி  சோதனைச்சாவடி வழியாக கூடலூர் பகுதியில் இருந்து கேரளாவிற்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மழை பாதிப்பை எதிர்கொள்ள தயார் தீயணைப்புத்துறை அதிகாரி தகவல்

ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் கூறியதாவது:நீலகிரி மாவட்டத்தில் இன்று (நேற்று) கனமழையும், நாளை (இன்று) அதிக கனமழையும் பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளோம். மழை தீவிரமடையும் பட்சத்தில் அனைத்து தீயணைப்பு வீரர்களையும் அவசர காலங்களில் உடனயாக மீட்பு பணிகளுக்கு செல்லும் வகையில், படை திரட்டும் பணி மேற்கொண்டு 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திர வாள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் சரி பார்க்கப்பட்டு பயன்படுத்துவதற்கு ஏதுவாக வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை மேற்கு மண்டல இணை இயக்குநர் அறிவுறுத்தலின் படி கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வெளியூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அதேசமயத்தில், கனமழை சமயங்களில் பொதுமக்களும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : National Disaster Response Team , Ooty: A holiday has been announced for schools and colleges today due to the possibility of very heavy rain in Nilgiri district.
× RELATED புழல் ஏரியை இன்று காலை அமைச்சர்...