×

முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவில் 1,500 ஆடு, 3,000 கோழி பலியிட்டு பிரமாண்ட அசைவ அன்னதானம்

*பல்லாயிரம் பேர் பங்கேற்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 1,500 ஆடுகள், 3,000 கோழிகளை பலியிட்டு நடந்த பிரமாண்ட அசைவ அன்னதானத்தில் பல்லாயிரக்கணக்கான பேர் பங்கேற்றனர். திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் முத்தழகுபட்டியில் புனித செபாஸ்தியார் திருத்தலம் உள்ளது.

350 ஆண்டுகள் மேல் பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஜூலை 31ம் தேதி புனித செபஸ்தியார் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு திருவிழா துவங்கியது. 4 நாட்கள் நடக்கும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாபெரும் அன்னதானம் நேற்று இரவு விடிய, விடிய பிரமாண்டமாக நடைபெற்றது.

 முன்னதாக நேற்று காலை செபஸ்தியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்து புனிதருக்கு காணிக்கை பவனி நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆடு, கோழி, அரிசி, காய்கறிகளை காணிக்கையாக படைத்தனர். மொத்தம் 1,500 ஆடுகள், 2,000 கோழிகள், 3 டன் அரிசி, தக்காளி 2 டன், கத்தரிக்காய் 2 டன், இஞ்சி 16 மூட்டை,  பூண்டு 400 கிலோ, வெங்காயம் 2.5 டன், ஆகியவைகள் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்டது.

தொடர்ந்து இவற்றை கொண்டு அசைவ அன்னதானம் தயார் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு புனிதரின் மன்றாட்டு ஜெபம் வேண்டுதல் பூஜை நடைபெற்று விடிய விடிய மாபெரும் கறி விருந்து அன்னதானம் நடைபெற்றது.

இதில் திண்டுக்கல், மதுரை, தேனி திருச்சி என வெளியூர்களிலிருந்து இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சாதி, மத பேதமின்றி கலந்து கொண்டனர். இன்று பகல் தேர் பவனியுடன் திருவிழா நிறைவடைகிறது. திருவிழா ஏற்பாட்டை ஊர் பெரியதனக்காரர்கள், டிரஸ்ட் மெம்பர்கள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.


Tags : Muttazhagupatti St. Sebastian Temple Festival , Dindigul, Temple Function, Non-vegetarian almsgiving
× RELATED யானை தாக்கி விவசாயி பலி