ஆடிப்பெருக்கை ஒட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த புதுமண தம்பதிகள்..!!

திருச்சி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோரங்களில் குவிந்த புதுமண தம்பதிகள், தாலி மாற்றி காவிரி தாயை வழிபட்டனர். வெள்ளப்பெருக்கு காரணமாக சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் காவிரியில் நீராட அனுமதி மறுக்கப்பட்டது. ஆடி 18ம் நாளன்று காவிரி கரையில் திரண்டு பூ, பழம், மஞ்சள்,காதோலை, கருக்குமணி உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து காவிரி தாயை வழிபடுவது வழக்கம். புதுமண தம்பதிகள் காவிரி கரைக்கு சென்று தங்களது திருமணத்தின்போது அணிந்திருந்த மாலையை ஆற்றில் விடுவார். காவிரியில் நீராடி, தாலியை பிரித்து புதிய தாலி கட்டிக்கொள்வதும் வழக்கம்.

இதற்காக, ஆடி 18ம் நாளான இன்று, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திற்கு புதுமண தம்பதிகள் ஏராளமானோர் வருகை தந்தனர். காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி மட்டுமின்றி நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் அம்மாமண்டபத்திற்கு வருகை தந்தனர். காவிரிஆற்று படித்துறைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் துலாக்கட்ட காவிரியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பலவகைகள், பச்சரிசி ஆகியவற்றை வைத்து காவிரி தாயை வழிபட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆடி 18-ஐ முன்னிட்டு முள்ளி ஆற்றங்கரையில் ஏராளமானோர் அதிகாலையிலேயே குவிந்தனர்.

வாழ்வில் அனைத்து வளங்களும் பெற வேண்டி வழிபட்ட பெண்கள் தாலிக்கயிற்றை புதிதாக மாற்றிக்கொண்டனர். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, படகுதுறை, மூலப்பாறை, பனங்காடு, கதவனை, ஆணைப்புலி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதையடுத்து காவல்துறை தடுப்பு பலகைகள் அமைத்து எச்சரிக்கை விடுத்துள்ளன. எனினும் ஆபத்தை உணராமல் தடுப்புகளை மீறி சிலர் காவிரியில் நீராடி வழிபட்டனர். 3 ஆறுகள் சங்கமிக்கும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் வெள்ளம் பெருக்கெடுத்து, கடல் போல காட்சியளிக்கிறது. இதன் காரணமாக ஆடிப்பெருக்கையொட்டி கரையோரங்களில் மக்கள் நீராடவும், வழிபடவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காவிரியில் உபரிநீர் தீர்ப்பால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கரூர் மாவட்டத்திலும் காவிரியில் நீராட தடை விதிக்கப்பட்டது. தவிட்டுப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் எடுத்துவந்த முளைப்பாரியை ஆற்றில் விடமட்டும் அனுமதிக்கப்பட்டன. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து 1.40 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரியாற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் படித்துறையில் குறைவான அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு, பொதுமக்கள் நீராட அனுமதிக்கப்பட்டது. புதுமண தம்பதிகள் குவிந்து தாலியை மாற்றிக்கொண்டு வழிபட்டனர்.     

Related Stories: