×

இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈந்த மன்னர் தீரன் சின்னமலை : எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ட்வீட்!!

சென்னை : இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு தினம் இன்று   கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டிசென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் ஏ.வ. வேலு,  மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனிடையே தலைவர்கள் பலர் தீரன் சின்னமலைக்கு ட்விட்டரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், வீரம் நிறைந்த தமிழ் மண்ணில் பிறந்து, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, இறுதி மூச்சு வரை எதிரிகளுக்கு அடிபணியாமல் எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த விடுதலை போராட்ட மாவீரர் #தீரன்_சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்..

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன், இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈந்த மன்னர் தீரன் சின்னமலை அவர்கள் மண்ணில் விதைக்கப்பட்ட நாள்  இன்று! தன் இறுதி மூச்சு வரை சமரசம் இல்லாமல் ஆங்கிலேயரை எதிர்த்த அந்த மாவீரரின் நினைவை, சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாம் எந்நாளும்  போற்றி வணங்கிடுவோம்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்தடுத்து 3 போர்களில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி, அவர்களை நடுங்க வைத்த வீரத்தின் விளைநிலம் கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவு நாளில் அவருக்கு  வீர வணக்கம் செலுத்துவோம்; அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்! தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  அதற்கு வசதியாக தேசிய, மாநிலப் பாடத் திட்டங்களில் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அந்த தீரனுக்கு  நமது வீர வணக்கத்தை செலுத்துவோம்; மரியாதையை செலுத்துவோம்! மாபெரும் வீரராக அறியப்பட்ட திப்பு சுல்தானின் வெற்றிக்கு அனைத்து வகைகளிலும் உதவியாய் இருந்தவர் தீரன் சின்னமலை தான். தேசப்பற்றில் அவருக்கு இணை எவருமில்லை. அவரது பெருமைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வோம்; அவரது சிறப்புகளை போற்றுவோம்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு நினைவுகூர்ந்துள்ளார்.



Tags : King Theeran Chinnamalai ,India ,Edappadi Palaniswami ,DTV Dhinakaran , Edappadi Palaniswami, DTV Dhinakaran, Tweet
× RELATED இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை...