தயாரிப்பாளர் வீட்டில் 2-வது நாளாக அதிகாரிகள் சோதனை: பல்வேறு ஆவணங்கள், ரொக்கம் சிக்கியதாக தகவல்

மதுரை: கலைப்புலி தாணு உள்ளிட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடைபெற்று வரக்கூடிய வருமானவரித்துறை சோதனை 2வது நாளாக நீடிக்கிறது. டெல்லியில் இருந்து 3 பேர் கொண்ட குழு விசாரணைக்கு வந்திருப்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜாவை தவிர, மதுரையை சேர்ந்த பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் முகாமிட்டு 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சினிமா படங்களுக்கு முதலீடு செய்ததில் வரிசெலுத்தாமல் முறைகேடு செய்த புகாரின் அடிப்படையில் இவர்களது இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

அன்புசெழியனுக்கு சொந்தமான மதுரையில் உள்ள  சுமார் 20 இடங்களில் மட்டுமல்லாது சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களிலும், விடிய விடிய அதிகாரிகள் சோதனை நடத்தினர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்புசெழியனின் சகோதரர் அழகர்சாமி வீட்டிலும் நேற்று இரவு முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரொக்கம் சிக்கியதாக கூறப்படும் நிலையில், டெல்லியில் இருந்து வந்துள்ள 3 பேர் குழு தற்போது அன்புசெழியன் மற்றும் அழகர்சாமி வீடுகளில் விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.  

Related Stories: