×

299 பொறியாளர் பணியிடங்களில் ஒன்றில் கூட தமிழரை நியமிக்காத என்.எல்.சி.யின் செயல் கடும் கண்டனத்திற்குரியது: ஓபிஎஸ் ஆவேசம்

சென்னை: நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 75 சதவீதம் பொறியாளர் பணியிடங்களில் தமிழக பொறியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தனியார் நிறுவனத்தில் 75 சதவீதம் பணியில் உள்ளூர் மக்களை அமர்த்த  ஆந்திரா, அரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஜார்கண்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள என்.எல்.சி.யில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பேர் பொறியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 299 பொறியாளர் பணியிடங்களில் ஒன்றில் கூட தமிழரை நியமிக்காத என்.எல்.சி.யின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. பிற மாநிலத்தவர் நியமிக்கப்பட்டது, தமிழர்களிடையே கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும் மின் தேவைக்காகவும் 65 ஆண்டுக்கு முன் என்.எல்.சி.க்கு ஏழை மக்கள் நிலம் வழங்கினர்.

நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்ற உறுதிமொழியை என்.எல்.சி. நிறைவேற்றவில்லை. நிலம் கொடுத்தவர்கள் தற்காலிக பணியாளர்களாகவும், பிற மாநிலத்தவர்களை நிரந்தர பணியாளராக நியமிப்பது கண்டிக்கத்தக்கது. திறமையான மாணவர்கள் இருக்கிற நிலையில், தமிழ்நாட்டை முற்றிலுமாக என்.எல்.சி. புறக்கணித்தது நியாயமற்ற செயல். மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். 75 சதவீதம் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை முதல்வர் தர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.


Tags : NLC , 299 Engineer, Tamil, N.L.C., OBS
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...