×

ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் பரபரப்பு பிரபல பிக்பாக்கெட் திருடணை மடக்கிப் பிடித்த அரசு பள்ளி மாணவர்கள் ரூ. 20 ஆயிரம் பறிமுதல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பிக்கெட் திருடனை  கையும்,  களவுமாக பிடித்துக் கொடுத்தனர்.
கும்மிடிபூண்டி அடுத்த சுண்ணாம்பு குளம் அருகே ஓபசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (67). அரிசி வியாபாரி. இவர்,  நேற்று முன்தினம் ஆந்திராவிற்கு சென்றவர் அங்கு அரிசி விற்பனை செய்துள்ளார். அதில் கிடைத்த பணத்தை வசூல் செய்து கொண்டு அங்கிருந்து ஊத்துக்கோட்டை  பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து பெரியபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக மாலை 4.30 மணி அளவில் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர். அப்போது அங்கு வந்த ஊத்துக்கோட்டை அரசு  பஸ்சில் ஏறினார்.  அதில், பள்ளி மாணவர்களின் கூட்டம் அதிமாக இருந்தது. இந்நிலையில், நாராயணசாமியை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்  ஒருவர், கூட்டத்தை பயன்படுத்தி கொண்டு, வியாபாரி அணிந்திருந்த  அரை நிஜார் பாக்கெட்டை பிளேடால் வெட்டி அதிலிருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து நாராயணசாமி  தான் பணம் வைத்திருந்த பாக்கெட் லகுவாக இருந்ததை கவனித்துள்ளார். அது கிழிந்திருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், அதிலிருந்த ரூ. 20 ஆயிரமும் காணவில்லை. உடனே பணம் திருடுபோய்விட்டதாக கத்திக் கூச்சலிட்டுள்ளார். நடந்த சம்பவத்தை அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். உடனே, பஸ்சில் இருந்தவர்கள் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில், அரிசி வியாபாரிக்கு அருகிலேயே பஸ்சில் நின்று கொண்டிருந்த மர்மநபர் மீது அங்கிருந்த ஊத்துக்கோட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனை கேள்வி மேல் கேள்வி  கேட்டு துளைத்தேடுத்தனர்.  நான் ஏன் அந்த பணத்தை எடுக்க வேண்டும் நான் எடுக்கவில்லை என பதில் கூறியுள்ளான். பேச்சு வர்தை முற்றவே சிறிது நேரத்தில் அந்த மாணவர்களை அடிக்கவும், முயற்சி செய்துள்ளார்.  

இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஏழுமலை உத்தரவின்படி,  சிறப்பு எஸ்.ஐ. பிரபாகரன் மற்றும் போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த மர்ம நபர் பஸ்சிலிருந்து இறங்கி, தப்பி ஓட முயற்சி செய்துள்ளான். உடனே அங்கிருந்த மாணவர்கள் அவனை மடக்கி  பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சோதனையில், அரிசி வியாபாரியிடமிருந்து திருடிய ரூ. 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் மேலும், நடத்திய தீவிர விசாரணையில் அரக்கோணம் ஜி.என் கண்டிகை பகுதியை சேர்ந்த ஏழுமலை (55) என்பதும் அவன் ஒரு பிக்பாக்கெட் திருடன் எனவும் தெரிய வந்தது. அவன் மீது கொலை மற்றும் திருட்டு உள்ளிட்ட 3 வழக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இருப்பது தெரியவந்தது. பணம் கிடைத்ததும் நாராயணசாமி மாணவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார். போலீசார் ஏழுமலை மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர்  சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags : Poothukkotta Bus Station , Public school students caught a popular pickpocket thief at Oothukottai bus station and got Rs. 20 thousand confiscation
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...