×

19 ஆண்டுகளுக்கு பிறகு சிறுவாபுரி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம்; துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆய்வு

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் திருக்கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பிறக  கும்பாபிஷேகத்தின் முன் ஏற்பாடுகள் குறித்து எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆய்வு நடத்தினார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் செவ்வாய்க்கிழமை 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோயிலில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு இம்மாதம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் நேரில் நேற்று ஆய்வு நடத்தினார். இதில், 19ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் வருவாய்த்துறை, அறநிலையத்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். யாக சாலை பணிகள், குடிநீர், கழிப்பறை, கும்பாபிஷேக நாளன்று எதிர்பார்க்கப்படும் பக்தர்கள் கூட்டம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பாதுகாப்பாக வீடு திரும்பும் வகையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தாசில்தார் ரஜினிகாந்த், கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சிராணி ராஜா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர். மேலும்,   மூலவர் பாலசுப்பிரமணியசுவாமிக்கு  பாலாயம் பணிகள் நடைபெற உள்ளது.  இதனையொட்டி, இன்று 3ம் தேதி மாலை 6 மணி முதல் 21ம் தேதி கும்பாபிஷேகம் முடியும் வரை, மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் உற்சவரை மட்டும் தரிசிக்கலாம் என ஆலயத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Siruvapuri Murugan Temple Kumbabhishekam after 19 years; Durai Chandrasekhar MLA Study
× RELATED சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000...