சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; சென்னை மாநகராட்சி முன்னாள், இந்நாள் கமிஷனர்கள் நேரில் ஆஜர் உரிமையியல் வழக்கு தொடர்பாக தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி முன்னாள் மற்றும் தற்போதைய ஆணையர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். சென்னை பெரம்பூரில் உள்ள ஜமாலியா பகுதியில் ஹைதர் கார்டன் மெயின் தெரு மற்றும் சந்திரயோகி சமாதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 40 அடி சாலை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக 2007ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதில் பிறப்பித்த தீர்ப்பை அமல்படுத்தாத மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் மண்டல அதிகாரி மோகனகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக 2015ல் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தெரிவித்த தகவல்களை ஐகோர்ட் ஏற்கவில்லை.

இதனால், நீதிபதிகள், மாநகராட்சி அப்போதைய ஆணையரும், மண்டல அதிகாரியும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் ஆணையர் விக்ரம் கபூர் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதிகள், அதிகாரிகள் தங்களை நீதிமன்றத்திற்கு மேலானவர்கள் என்றும் தங்களுக்கு மேல் யாரும் இல்லை என்றும் நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தவிர்க்க முடியாத காரணத்தால் முன்னாள் ஆணையர் வர இயலவில்லை என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், முந்தைய ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் தற்போதைய ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை மாநகராட்சியின் முந்தைய ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் தற்போதைய ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர். இதையடுத்து இந்த சாலை தொடர்பான உரிமையியல் வழக்கு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய மாநகராட்சி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர். மேலும், எதிர்காலத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டால் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று ஆணையர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: