அரசுக்கு சொந்தமான குடோனில் மழையால் நெல் மூட்டைகள் சேதம்; அடையவில்லை எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு

சென்னை: அரசுக்கு சொந்தமான குடோனில் மழையால் நெல் மூட்டைகள் சேதாரம் அடைந்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் தவறானது என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கூட்ட அரங்கில் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கூடடுறவுத்துறை, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடந்தது.

கூட்டம் முடிந்த பிறகு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் இடம்பெற்றிருந்த 12 லட்சத்து 50 ஆயிரம் இறந்தவர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.   நேரடி கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு சம்பள உயர்வு, தினப்படி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு முறையாக வாங்காத காரணத்தினால் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

தஞ்சாவூர் முனைப்பட்டி பகுதியில் 5 ஆயிரம் மூட்டை நெல் மழையால் நனைந்து சேதமாகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே அங்கு சென்ற உயர் அதிகாரிகள் நெல் மூட்டைகள் மழையால் நனையாதபடி நடவடிக்கை எடுத்து அரவை ஆலைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த உண்மையை கூட அறிந்து கொள்ளாமல் முற்றிலும் தவறான செய்தியை எடப்பாடி கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: