×

சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியை  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் இயங்கும் தொழில் காப்பகங்கள், தொழில் காப்பகங்களின் ஆதரவு பெற்ற புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் வகையில் அமைத்துள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். புத்தொழில்களுக்கு, உந்து சக்தியாகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான துடிப்பான தொடக்க சூழலை கட்டமைப்பதற்கும், புத்தாக்கத்தால் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு பல்வேறு சீர்மிகு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

முதல்நிலை நகரமான சென்னையில் இருந்து 11 புத்தொழில் நிறுவனங்களும், இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து 12 புத்தொழில் நிறுவனங்களும்,  மூன்றாம் நிலை நகரங்களான ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய நகரங்களில் இருந்து 8 நிறுவனங்களும், என மொத்தம் 31 நிறுவனங்கள், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பயனாளிகள் இருக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 16 நிறுவனங்களில் நிறுவனர், இணை நிறுவனராக பெண்கள் உள்ளனர்.  பெருநகரங்களில் மட்டுமல்லாமல்  இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களிலும் புத்தொழில் முனைவை ஊக்குவிக்கும் விதமாக மதுரை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வட்டார புத்தொழில் மையங்களை முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மேலாண்மை, வணிக தொழில்நுட்பம் செயலிகள், வாழ்வாதாரம், சமூக மாற்றம் ஆகிய பல்வேறு தலைப்புகளில், ஒவ்வொரு பிரிவின் கீழும் 20 தொழில் முனைவோர் கொண்ட குழுவினை உருவாக்கி, ஒவ்வொரு குழுவிற்கும் 3 மாதங்களில் இருந்து 12 மாதங்கள் வரையிலான தொழில் முடுக்க பயிற்சி பட்டறைகளை ஒருங்கிணைக்க உள்ளது. முதற்கட்டமாக 8 புத்தொழில் சமூக குழுக்களின் கிளைகளை முதல்வர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண் ராய், தொழில் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Nadu Industrial Organizations Industry Archives Meeting Program ,Chennai Trade Centre ,Chief Minister ,M.K.Stalin. , Tamil Nadu Industrial Organizations Industry Archives Meeting Program at Chennai Trade Centre; It was inaugurated by Chief Minister M.K.Stalin
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...