×

அரசு நிலத்தை தஞ்சை சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமித்த விவகாரம் மாற்று இடத்தை ஏற்க முடியாது; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

சென்னை: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால் அவர்கள் தருவதாக கூறும் மாற்று இடத்தை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் கடந்த 35 ஆண்டுகளாக 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வந்துள்ளது. இந்த நிலத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி அந்த பல்கலைக்கழகம் கொடுத்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இதையடுத்து, நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு ஒதுக்கிய நிலத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்க தயாராக இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில், அரசு நிலத்துக்கு பதிலாக நிலத்தை மாற்றிக் கொள்ள வகை செய்யும் வகையில் கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி மாற்று இடம் வழங்க அனுமதி கோரி அரசுக்கு  விண்ணப்பித்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு  கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அது பொதுவான அரசு உத்தரவு. அந்த உத்தரவு மனுதாரருக்கு பொருந்தாது. சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளது. ஏற்கனவே நீர்நிலைகளில் உள்ள  ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசின் புது அரசாணையின் கீழ் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அளித்த விண்ணப்பத்துக்கு மூன்று நாட்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Tags : Tanjore Shastra University ,Tamil Nadu government ,High ,Court , The issue of encroachment of Government land by Tanjore Shastra University cannot accept alternate location; The Tamil Nadu government confirmed in the High Court
× RELATED சட்டமன்ற நிகழ்வு நேரலை வழக்கு ஒத்திவைப்பு