மதுரை கோயில் திருவிழாவில் கொதிக்கும் கூழ் அண்டாவில் தவறி விழுந்து முதியவர் பலி: வீடியோ வைரல்

மதுரை: மதுரை கோயில் திருவிழாவில் தயாரிக்கப்பட்ட கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்து ஒருவர் உயிரிழந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை, பழங்காநத்தம் மாடக்குளத்தை சேரந்தவர் முத்துக்குமரன் (52). தனியார் நிறுவன ஊழியர். இவர், அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் விழா கமிட்டியில் நிர்வாகியாவார். கடந்த ஜூலை 29ம் தேதி, ஆடி வெள்ளிக்கிழமை அன்று  இக்கோயிலில் கூழ் காய்ச்சி ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் முன் 6 பெரிய அண்டாக்களில் கொதிக்க, கொதிக்க கூழ் தயாராகிக் கொண்டிருந்தது. இந்த பணிகளை பார்வையிட முத்துக்குமரன் அங்கு வந்தார்.

திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதில் நிலைதடுமாறிய அவர், கொதிக்கும் கூழ் அண்டாவில் சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் பதறியடித்து ஓடிச்சென்று அவரை மீட்க முயல்வதற்குள் உள்ளே மூழ்கிவிட்டார். கூழ் கொதித்துக்ெகாண்டிருந்ததால் அண்டாவை கீழே தள்ளி முத்துக்குமரனை மீட்டு உடனே மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவரை மீட்க முயன்ற 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. முத்துக்குமரன் கூழ் அண்டாவில் விழும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இக்காட்சி சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: