வாஷிங்டன்: அமெரிக்காவில் 3 ஆயிரம் இறப்பதற்கு காரணமான இரட்டை கோபுர தாக்குதலின் மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா தலைவன் ஜவாகிரியை, ஆப்கானில் பதுங்கி இருந்தபோது டிரோன் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்த இரட்டை கோபுரத்தின் மீது விமானங்களை மோதி தகர்த்து, 3 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாவதற்கு காரணமான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் அய்மன் அல்-ஜவாகிரி. அல்-கொய்தா அமைப்பின் 2ம் கட்ட தலைவனாக அப்போது இருந்தார். 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் கொன்ற பிறகு, இந்த அமைப்புக்கு ஜவாகிரி தலைமை ஏற்றார்.
இவருடைய தலைக்கு அமெரிக்கா ரூ.200 கோடி பரிசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு வீட்டில் தனது குடும்பத்துடன் ஜவாஹிரி தங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை கொல்வதற்கு அமெரிக்க அதிபர் பைடன் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். அந்த வீட்டை உளவு டிரோன்கள் மூலம் கண்காணித்த அமெரிக்க ராணுவம், கடந்த மாதம் 31ம் தேதி பால்கனியில் ஜவாஹிரி நிற்பதை கண்டது. உடனடியாக, டிரோன் மூலமாக 2 ஏவுகணைகளை துல்லியமாக அவர் மீது வீசி தாக்கியது. இதில் அவர் கொல்லப்பட்டார். இதை உறுதிப்படுத்தவே, இத்தனை நாளாக இதை அமெரிக்கா அறிவிக்காமல் இருந்துள்ளது. இதன் மூலம், இரட்டை கோபுர தாக்குதலுக்கு 21 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்கா பழித் தீர்த்துள்ளது.