×

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்று அதிமுக ஆட்சியில் புகார் முடித்து வைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையும் வேலுமணி தரப்புக்கு வழங்கப்பட்டது.

அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

Tags : Chennai ,Coimbatore Corporation , Chennai, Coimbatore Corporation to file probe report on tender malpractice case: Court orders anti-bribery department
× RELATED பில்லூர் அணை வறண்டது குடிநீர் தட்டுப்பாடு தாண்டவமாடும் அபாயம்